வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (09/10/2018)

கடைசி தொடர்பு:11:15 (10/10/2018)

`எந்த முகாந்திரமும் இல்லை; நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப முடியாது!’ - நக்கீரன் கோபால் விடுவிப்பு

சட்டப்பிரிவு 124ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

நக்கீரன் கோபால்

ஆளுநரின் பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நக்கீரன் கோபால் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என்று வாதிடப்பட்டது. போலீஸார் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். 

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ``ஆளுநரின் பணியில் தலையிட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். நீதிமன்றத்தில் நாங்கள், `ஆளுநர் கேட்டுக்கொண்டதாக புகாரில் இல்லை. அதேபோல், குறிப்பிட்ட  பத்திரிகை பிரதிகள் இணைக்கப்படவில்லை. சட்டபிரிவு 124-க்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுக்க வேண்டும் அல்லது பலம் பிரயோகிக்க வேண்டும். இவை நடைபெற வேண்டுமானால், இருவரும் நேருக்கு நேர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இவை எவையும் நடைபெறவில்லை. மேலும், ஏப்ரலில் வெளியிட்ட செய்திக்கு இத்தனை மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுப்பதையும் முறையிட்டோம்’ என்று வாதிட்டோம். அதேபோல், ஊடகங்கள் சார்பாக இந்து என்.ராம், கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, சட்டப்பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபாலைக் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி  நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் கோரி தாக்கல் செய்த போலீஸார் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்’’ என்று தெரிவித்தார்.