வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (09/10/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! - 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு பதிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளில் சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் சி.பி.ஐ.யின் விசாரணையும் தொடங்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் நடந்த போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 178 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நேற்று (8.10.18) சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி. மாரிராஜா தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மே மாத இறுதியில் இந்த வழக்குகளில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை மதுரை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி மாரிராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணையையும் நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்தச் சம்பவம் தொடர்பான 243 வழக்குகளில் 173 வழக்குகளை சிப்காட் போலீஸார் பதிவு செய்துள்ளதை ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மீதமுள்ள வழக்குகளைத் தனித்தனியாக விசாரணை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, இச்சம்பவம் தொடர்பான 5 முக்கிய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த 173 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்க ஆயத்தாமாகினர்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது  நீதிமன்றம். இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸார்  சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் சங்கம், வீராங்கனை அமைப்பு, மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளில் சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் விசாரணையும் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ.,அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம், `` தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் சேகர் என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஐ.பி.சி. சட்டத்தின்படி 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் சில புகார்கள் எழுந்துள்ளன. எனவே, அனைத்து தரப்பினரிடமும் முழுமையான விசாரணை நடத்தப்படும். விசாரணைக்குப் பின், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், அவர்களை தூண்டியவர்கள் பெயரும் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படும். இந்த வழக்குகளை சி.பி.ஐ. துணை காண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் இக்குழு தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்க உள்ளது” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க