வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (09/10/2018)

கடைசி தொடர்பு:19:09 (09/10/2018)

`நக்கீரன்' கோபால் கைதும், விடுதலையும்! - முக்கியப் பிரமுகர்களின் விமர்சனங்கள்

`நக்கீரன்' கோபால் கைதும், விடுதலையும்! - முக்கியப் பிரமுகர்களின் விமர்சனங்கள்

ன்று காலை நக்கீரன் கோபால் புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டு அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தார். உடனடியாக அங்கே கூடிய வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் யாரையும் காவல் நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கவில்லை. அந்தப் பகுதியில் இதனால் தவிர்க்க இயலாத பரபரப்பு நிலவியது. உடனே அங்கே வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை.

`ஒரு கட்சிக்காரனாக இல்லை. ஒரு வழக்கறிஞராகக் கேட்கிறேன். என்னை உள்ளே விடுங்கள். அதற்கான உரிமை எனக்கு இருக்கிறது' என்றார் வைகோ. ஆனாலும் அவர் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் கோபமடைந்த வைகோ உடனே சிந்தாதிரிப்பேட்டை பிரதான சாலையில் அமர்ந்து `தர்ணா' செய்தார். பிறகு, வைகோவும் காவலர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படவே, அந்தப் பகுதி மேலும் பரபரப்பானது. இத்தகையச் சூழலில் அங்கே இருந்த வழக்கறிஞர் பாவேந்தனிடம் பேசினேன். 

``ஒருவரைக் கைது செய்வதற்கு முன்பு அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டும். யார் புகார்தாரார்? எதனால் இந்தக் கைது? எந்தெந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்கிற அடிப்படைத் தகவல்களைக் கூட காவல்துறையினர் தர மறுக்கின்றனர். அவரைக் கைது செய்து பலமணிநேரம் ஆனபிறகும் அதிகாரபூர்வ தகவலைத் தர மறுக்கிறார்கள். வழக்கறிஞர்களான எங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். 

நக்கீரன் கோபால்

ஒரு செய்திக்கட்டுரை பொய்யாகவோ அல்லது அவமதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருந்தால் அவமதிப்பு வழக்கு, அவதூறு வழக்கு போடுவதற்குச் சட்டத்தில் வாய்ப்பு இருக்கும்போது ஒரு கிரிமினலை கைது செய்வதுபோல் ஒரு பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்வதன் அவசியம் என்ன? அவசரம்தான் என்ன?" என்றார்.

பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதி தமிழன் பேசுகையில் ``பத்திரிகையாளர்களை மிரட்டக்கூடிய ஒரு செயலாகத்தான் இதைப் பார்க்கிறேன். ஒருவேளை நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்திருக்குமேயானால் தமிழகத்திலுள்ள அத்தனை பத்திரிகையாளர்கள் மீதும் அதே தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறோம். ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றோர்கள் இந்த அரசுக்கு தேசபக்தர்களாகத் தெரியும்போது விமர்சனங்களை, கருத்துகளைப்  பொதுமக்களுக்குக்  கொண்டுசெல்லக் கூடியவர் தேசத் துரோகிகளாகத் தெரிகிறார்கள் எனில் பத்திரிகையாளர்கள் பெரும் மதிப்புடன் இந்தத் தேசத் துரோகப் பட்டத்தைப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 

நக்கீரன் கோபால் கைதுக்கு மேலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமாகிய கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை இது..

கமல்ஹாசன் நக்கீரன் கோபால் குறித்து

நக்கீரன் கோபாலை நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், ``நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த ஆட்சி பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்" என எச்சரித்திருந்தார். 

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``தமிழக ஆளுநர் தன்னை ஏதோ ராஜராஜ சோழன் போல, பேரரசர் போல நினைத்துக் கொள்கிறார். நிர்மலா தேவி குறித்து விசாரிக்க அவர் போட்ட ஒரு நபர் கமிஷன் என்ன ஆனது.. இதைக் கேட்டால் கைது செய்வதா! ஆளுநர் என்ன தமிழகத்தின் பேரரசரா.... " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் 124ன் படி கோபால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தேசத்துரோகத்தின் கீழ் வரும். குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணிகளைச் செய்ய விடாமல் அவர்கள் மனம் புண்படும்படியான உள்நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இவர் மீதான இந்த வழக்குப் பிரிவை நீதிமன்றம் ரத்துசெய்ததோடு அவரை நீதிமன்றக் காவலில் அனுப்புவதற்கும் மறுப்பு தெரிவித்து விடுதலை செய்தது.

அருப்புக்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் மாணவியரை சில `பெரிய மனிதர்களின்' பாலியல் தேவைக்காகக் கட்டாயப்படுத்தியது தொடர்பான வழக்கில், பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து நக்கீரன் இதழ்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததுதான் இந்தக் கைதுக்குக் காரணம் எனப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்