வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:19:45 (09/10/2018)

மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 19 பேர் கன்னியாகுமரி கடற்பகுதியில் பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களை கன்னியாகுமரி கடற்பகுதியில் இருந்து 205 கடல்மைல் தொலைவில் அபிராஜ் என்ற ரோந்துக் கப்பல் மூலமாக இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர், விஜி, அந்தோணி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த விக்கி, அன்சாரி, செல்வராஜ், எபிஸ்டன், சவேரியார்புரத்தைச் சேர்ந்த செல்வம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோபின் ஆகிய 9 பேரும், தாளமுத்துநகரைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜ், ஜெகன், வசந்த், திரேஸ்புரத்தைச் சேர்ந்த கில்பர்ட், சாயல்குடியைச் சேர்ந்த ஜோசப், தாளமுத்துநகரைச் சேர்ந்த வல்லவன், வேம்பாரைச் சேர்ந்த ராமர், ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த டால்வின், வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தைராஜ் ஆகிய 10 பேரும் கடந்த 1-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

`தமிழகத்துக்கு `ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் 5 நாள்கள் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’  என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து, மீன்வளத்துறை மூலமும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பைத் தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கரைதிரும்பி விட்டனர்.

இந்த நிலையில்தான், ஆழ்கடல் பகுதியில் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் அவர்களை விசைப்படகின் உரிமையாளர்கள் தொடர்புகொண்டனர். அவர்களின் தொலைத்தொடர்பு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகவும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் இதுகுறித்து அப்படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 5-ம் தேதி மனு அளித்தனர்.

இந்த நிலையில், இந்திய கடலோரப் பாதுகாப்புப்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள் மூலமும், டோனியர் விமானம் மூலமும் மாயமான மீனவர்களை தீவிரமாகத் தேடும் பணி கடந்த 4 நாள்களாக நடந்தது. கடலோர காவல் படைக்குச் சொந்தமான அபிராஜ் என்ற ரோந்துக் கப்பல் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியில், கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 205 கடல்மைல் தொலைவில் 19 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள், நாளை (10.10.18) தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க