`ஓய்வூதியம் அளிக்காவிட்டால் வேலைநிறுத்தம்' - எச்சரிக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்! | Water board department staffs protest for pension in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/10/2018)

`ஓய்வூதியம் அளிக்காவிட்டால் வேலைநிறுத்தம்' - எச்சரிக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொதுமேலாளர் அரங்கநாதன் உறுதியளித்துள்ளார். 

போராட்டம்

சென்னையிலுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 1997-98-ம் ஆண்டுகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி 1998-ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதில், பலர் பணிக்காலத்தில் மரணமடைந்தனர். அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பலன்கள் முறையாக வழங்கப்பட்டன. திடீரென 2014-ம் ஆண்டு முதல் மேற்கூறிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் எவ்வித முகாந்திரமுமின்றி முடக்கப்பட்டது.

இன்றுவரை முடக்கப்பட்டதற்கான காரணத்தை ஊழியர்களுக்குத் தெரிவிக்கவில்லை. இது சம்பந்தமாக சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தீர்வு காண்பதாக ஏற்றுக்கொண்டு ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. வாரியத்தின் இந்த ஊழியர் விரோதப்போக்கால் பணிக்காலத்தில் மரணமுற்ற மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் குடும்பங்கள் நிர்கதியாக உள்ளன. நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற நிரந்தரத் தொழிலாளர்களுக்கு, அவர்களது சேமிப்பிலுள்ள சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பலன்களும் ஓராண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் குடிநீர் வடிகால் வாரிய பொது மேலாளர் அரங்கநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் வி.குமார், 'ஊழியர்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நவம்பர் 14, 15-ம் தேதிகளில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம். அப்போது எதுவும் தீர்வு எட்டப்படாவிட்டால் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். வேலை நிறுத்தம் நடைபெற நேர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்போம்' என்றார்.