வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (09/10/2018)

கடைசி தொடர்பு:20:02 (09/10/2018)

துணைவேந்தர் நியமனம் மட்டுமல்ல, கெளரவப் பேராசிரியர் நியமனத்திலும் 250 கோடி ஊழல்!

"ஒரு விரிவுரையாளரைப் பணிநிரந்தரம் செய்ய, 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசிவருகிறார்கள். ஆயிரம் பேரை நியமித்தாலே 250 கோடி ரூபாய் வசூலிக்க முடியும் என்பதால், தெளிவாக வேலை நடந்துவருகிறது" - தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வீரமணி

துணைவேந்தர் நியமனம் மட்டுமல்ல, கெளரவப் பேராசிரியர் நியமனத்திலும் 250 கோடி ஊழல்!

``துணைவேந்தர்கள் நியமனத்தில், பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளது" என்று தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்தால், உயர்கல்வித் துறையில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசியபோது, ``இது காலங்காலமாக நடந்துவருகிறது. இது, தமிழக பல்கலைக்கழகங்களுக்குப் புதிதல்ல. இதைவிட மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கான வேலைகள் நடந்துவருகின்றன" என்று அதிர்ச்சியுடன் தகவலைப் பகிர்ந்தனர்.

என்ன ஊழல் என்பது குறித்து விசாரித்தோம். 

துணைவேந்தர்

கடந்த தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், `அரசுக் கலைக்கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ``தேர்வு மூலம் கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்றார். இதனால் கெளரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் போட்டுப் பேசிவருகின்றனர். 

இது, மற்றவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுடன் விசாரித்தோம்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வீரமணி, ``பல இடங்களில் கெளரவ விரிவுரையாளர் பணியிடங்கள் எந்தவிதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேகவேகமாக நிரப்பப்பட்டுவருகின்றன. இவர்களைப் பணிநிரந்தரம் செய்ய, திரை மறைவில் எல்லா வேலைகளும் நடந்துவருகின்றன. உயர்கல்வித் துறையில் இருப்பவர்கள், கெளரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய 250 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிப் பேராசிரியர்களே கமிஷன் ஏஜென்ட்களாக களம் இறங்கியிருக்கிறார்கள். ஒரு விரிவுரையாளரைப் பணிநிரந்தரம் செய்ய, 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசிவருகிறார்கள். ஆயிரம் பேரை நியமித்தாலே 250 கோடி ரூபாய் வசூலிக்க முடியும் என்பதால், தெளிவாக வேலை நடந்துவருகிறது. 

பேராசிரியர் வீரமணிதற்போது, துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்குத் தெரிந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கிவருகிறார்கள். இவர்களிடம் பணிநிரந்தரம் உண்டு என்பதால், தற்காலிகப் பணிக்கே லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள். கெளரவ விரிவுரையாளர்களை, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் மீண்டும் நியமிக்க வேண்டும். இதை எந்தக் கல்லூரியும் கடைப்பிடிப்பதில்லை.

`சேலம் அரசுக் கல்லூரியில் முறைகேட்டில் ஈடுபட்டார்' என ஒரு கெளரவ விரிவுரையாளர், பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், இவருக்கு மற்ற கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளராகச் சேர்க்க வாய்மொழி உத்தரவிட்டு இருக்கிறது கல்லூரி இயக்குநர் அலுவலகம். அந்தளவுக்குக் கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் அக்கறைக்காட்டி வருகிறது அந்த அலுவலகம். கெளரவ விரிவுரையாளர்களை இவ்வாறு பணிநிரந்தரம் செய்வது சமூகநீதிக்கு எதிரானது. அரசு எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் கல்லூரியில், 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகப் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்களும் உள்ளனர். அனைவரும் பங்குபெறும் வகையில் தேர்வு நடத்தி கல்லூரிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

`துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் புரண்டிருக்கிறது' என்கிறார் ஆளுநர். `துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித் துறைக்கும் சம்பந்தமில்லை' என்கிறார் உயர்கல்வி அமைச்சர். பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரை பணிநிரந்தரம் செய்ய வீட்டில் லஞ்சப்பணம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியின் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களும் மறந்துவிட்டார்கள்" என்றார். 

பேராசிரியர் செல்வகுமார்தனியார் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் செல்வகுமார், ``ஒப்பந்த அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிபவர்கள், வெளிப்படையாகத் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர்களுடைய தகுதி, திறமை போன்றவற்றை, கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற மதிப்பெண், கற்பித்தல், ஆராய்ச்சியில் அவர்களது பங்கை ஆராய்ந்தால் தெரிந்துகொள்ள முடியும். இவர்களில் பலர், பகுதி நேரத்தில் படித்தவர்கள். கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க, பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால், அவை எதுவும் கடைப்பிடிக்கப்படாமல், தகுதியில்லாதவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்று பணிநிரந்தரம் செய்வது என்பது உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் தாழ்த்துவதற்குச் சமம். 

`அரசுப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய முடியாது' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சரோ, `கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்' என அறிவிப்பது, சமூகநீதிக்கு முரணாக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்றார். 

தமிழக உயர்கல்வித்துறை, இந்திய அளவில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கைக் கொண்டிருப்பதைப் பெருமையாகச் சொல்லிவரும் வேளையில், பேராசிரியர்கள் நியமனத்தில் முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல், அடுத்த தேர்தலை மட்டுமே மனதில் வைத்து பணம் பார்ப்பது உயர்கல்வியைக் குழிதோண்டிப் புதைப்பது போன்றது. தகுந்தமுறையில் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் கோரிக்கை. 


டிரெண்டிங் @ விகடன்