வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/10/2018)

கடைசி தொடர்பு:20:49 (09/10/2018)

`கும்பகோணம் அலுவலகத்தில்தான் ஆஜராக வேண்டும்!’ - சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கறார்

சென்னையில் பழைமையான சிலைகளைப் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக 14 பேர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என  சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் 11 பேர் வழக்கறிஞர் மூலம் கும்பகோணம் அலுவலகம் தொலைவில் உள்ளதால், எங்களை சென்னையில் விசாரித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அதற்கான மனுவை அளித்தனர். ஆனால், அதனை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்க மறுத்து, சம்மன் பெற்றுக்கொண்டவர்கள் நேரில்தான் ஆஜராக  வேண்டும் எனக் கூறிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள குஜராத்க்ச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரன்வீர் ஷா, இவரிடம் பழைமையான  சிலைகளை விற்பனை செய்ததாக சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து அவரது வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பழைமையான கலைப்பொருள்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய தூண்கள், உலோகச் சிலைகள், கற்சிலைகள் என மொத்தம் 267 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து ரன்வீர் ஷாவின் தோழி சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட்டைச் சேர்ந்த கிரண்ராவ் என்பவரது வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரன்வீர் ஷா, கிரண்ராவ் மற்றும் அவர்களின் பணியாளர்கள் உள்ளிட்ட 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கிடையில் கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகமாக மாற்றி அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர்.

இன்று காலை முதல் அந்த அலுவலகத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு இன்று மனுத்தாக்கல் செய்தநிலையில், அவர்களின் பணியாளர்களின் 11 பேர் சார்பிலும் வழக்கறிஞர்கள் சரவணன், செல்வம் ஆகியோர், "கும்பகோணம் அலுவலகம் தொலைவில் உள்ளதால், எங்களை சென்னையிலேயே விசாரித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என மனுக்களை வழங்க வந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி சுந்தரம், `சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் கும்பகோணம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அங்குதான் ஆஜராக வேண்டும். அதனால் நீங்கள் வழங்கும் மனுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார். பின்னர், இதில் சம்பந்தப்பட்ட நரேன் என்பவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஆஜராகினார்.

அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சென்னையில் ரன்வீர் ஷா, கிரண்ராவ் ஆகியோரது வீட்டில் பழைமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களிடமும் அவரைச் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்த 14 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கும்பகோணம் அலுவலகத்தில்தான் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறி்ப்பிட்டுள்ளோம். ஆனால், சிலர் கும்பகோணம் வரமுடியவில்லை என வழக்கறிஞர் மூலம் மனு அளிக்க வந்தனர். அதை நாங்கள் பெற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டோம். இன்று வர முடியாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும்’’ எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க