வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (09/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (09/10/2018)

கல்லூரியை நிர்வகிப்பதில் மோதல்... நாகர்கோவில் அருகே 85 பேர் மீது வழக்கு பதிவு!

நாகர்கோவில் அருகே பழவிளை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 85 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்லூரி

 நாகர்கோவில் அருகே பழவிளையில் காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உள்ளது. நாடார் மகாஜன சங்கத்துக்குச் சொந்தமான இந்தக் கல்லூரியை நிர்வகிப்பதில் இரு தரப்பினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. கல்லூரிக்குள் இருந்து ஒருதரப்பினரும் வெளியில் இருந்து மற்றொரு தரப்பினரும் கற்களையும் பாட்டில்களையும் வீசி கடுமையாக மோதிக்கொண்டனர். காவல்துறையினர் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த மோதலில் இரண்டுபேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட 36 பேர் மீதும், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மோகன்தாஸ் கொடுத்த புகாரில் தி.மு.க-வைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்ட 49 பேர் என மொத்தம் 85 பேர் மீதும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.