வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (09/10/2018)

கடைசி தொடர்பு:21:05 (09/10/2018)

அரசாங்கத்துக்குக் கண்டனம்... நீதித்துறைக்கு நன்றி! - கைகோத்த தமிழக ஊடகங்கள்

நக்கீரன் கோபால்

தமிழக கவர்னரைத் தாக்கும்விதமாக 2018 ஏப்ரல் 20-22 கட்டுரை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி, நக்கீரன் இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை இன்று (9.10.2018) காலை சென்னை காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்த விஷயம் தொடர்பாகத் தமிழக பத்திரிகை ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் தமிழக அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் மூத்த பிரதிநிதிகள் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை...

இந்திய தண்டனைச் சட்டத்தின் மிக பயங்கரமான சட்டப்பிரிவான 124-ன் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ஆட்சேபகரமான கட்டுரை என்று கூறப்படும் ஒன்றை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகையின் ஆசிரியர்மீது இப்படி இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது பிரிவு பிரயோகிக்கப்படுவது, இதுவரை நடந்திராத விஷயம்; யாரும் இப்படிக் கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டதும் இல்லை. ஜனாதிபதி, கவர்னர் உள்ளிட்ட அரசுப் பிரதிநிதிகள் சட்டப்படி தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடமையாற்றும்போது, அவர்களை அந்தக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்துத் தாக்கும் குற்றச் செயல் புரிவோரையே இந்தச் சட்டப்பிரிவில் கைது செய்ய முடியும். ஆனால், கோபால் உள்ளிட்டவர்கள்மீது இந்தச் சட்டப்பிரிவில் வழக்கு பதிவுசெய்து கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கவர்னரின் அலுவலகம் கேட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஊடகங்கள்மீது இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நோக்கம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே. கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவே, செய்தி ஊடகங்களின் சுதந்திரமும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த முயற்சியை அனுமதித்தால், அது கருத்து சுதந்திரத்துக்கு மரண அடியாக அமைந்துவிடும். கோபால் கைது நடவடிக்கையில், உச்ச நீதிமன்றம் வரையறுத்த வழிகாட்டு நெறிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

தமிழக ஊடகங்கள்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கறுப்பு அத்தியாயத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக நீதித்துறை அமைந்துள்ளது. கோபால் தரப்பு வாதங்களையும் அரசுத்தரப்பு வாதங்களையும் கேட்ட, 13-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற நீதிபதி எஸ்.கோபிநாதன், நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க முடியாது என மறுத்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதித்துறைக்கு அளித்துள்ள சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பதில் நீதித்துறை காட்டும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த தருணமாக இது அமைந்துள்ளது. கோபால் உள்ளிட்டவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

- என்.ராம், தலைவர், தி இந்து குழுமம்
பா.சீனிவாசன், பதிப்பாளர் மற்றும் ஆசிரியர், ஆனந்த விகடன்; நிர்வாக இயக்குநர் - விகடன் குழுமம் 
கி.ராமசுப்பு, ஆசிரியர், தினமலர்
எல்.ராமசுப்பு, பதிப்பாளர், தினமலர் - மதுரை மற்றும் கோவை
எஸ்.கார்த்திகைசெல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை தொலைக்காட்சி
ஆர்.எம்.ஆர்.ரமேஷ், பதிப்பாளர், தினகரன்
முகுந்த் பத்மநாபன், ஆசிரியர், தி இந்து
எம்.குணசேகரன், ஆசிரியர், நியூஸ் 18 தமிழ்நாடு
பகவான் சிங், ஆசிரியர், டெக்கான் க்ரானிக்கிள்
அருண் ராம், ஆசிரியர், டைம்ஸ் ஆஃப் இண்டியா, சென்னை