வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (09/10/2018)

`மூன்று நாள்களில் கரை ஒதுங்கிய இரண்டு பேர்' - மெரினாவில் ஏற்பட்ட சோகம்

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் இரண்டு பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன என்று மெரினா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சென்னை மெரினா கடற்கரைக்கு உள்ளூரிலிருந்து மட்டுமல்ல வெளியூரிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். ஒரு சில நேரங்களில், குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் கடல் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கிடையில், கடந்த மூன்று  தினங்களில் உயிரிழந்த இரண்டு பேரின் உடல் கரை ஒதுங்கியதுள்ளது என்று மெரினா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 5-ம் தேதி சுபாஷ் சந்திரபோஸின் சிலைக்கு அருகில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் ஒதுங்கியுள்ளது. அந்த உடலை, மெரினா காவல்துறையினர் மீட்டு, அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

அதேபோல், நேற்று கூவம் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஓர் உடல் மீட்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதுவரையில் கரை ஒதுங்கிய உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆழம் தெரியாமல் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம். மெரினா கடற்கரையில் குளிப்பவர்கள் கவனமாக குளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், மேற்கண்ட உடல் குறித்து தகவல் அறிந்தால், '044-23452667, 044-25362327' ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.