வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (09/10/2018)

வைக்கோல் போரில் பதுக்கப்பட்ட 60 கிலோ கஞ்சாப் பொட்டலங்கள்! - தஞ்சை அருகே 13 பேர் கைது

 

தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் புகழ்பெற்றது. இது முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழ்வதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், இக்கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டு வந்தார்கள்.

மாரியம்மன் கோயில் அருகே உள்ள கோமுட்டி தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார், தீவிர சோதனை நடத்தினர். வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் போரின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதைச் சோதனை செய்தபோது, ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன. அங்கிருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தங்கமணி என்ற ஒரு பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா விலைக்கு வாங்கி வரப்பட்டு, புன்னைநல்லூரில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. `காவல்துறையினர் தங்களது நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது. இது சுற்றுலா தலமாகவும் திகழ்வதால், தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்’’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.