வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/10/2018)

`தீவுகளில் கடல் அரிப்பைத் தடுக்க 8,000 பனை விதைகள்!' - வனத்துறை சிறப்புத் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் கடல் அரிப்பைத் தடுக்கவும், பறவைகளுக்குப் பயன் தரும் வகையிலும் தீவுப் பகுதிகளில் பனை வளர்ப்புத் திட்டம் துவக்கப்பட உள்ளது.

தீவுப் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க பனை உள்ளிட்ட மரங்கள் வளர்க்க திட்டம்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார்  கூறுகையில், ``தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியும் தீவுகளைப் பாதுகாக்க பனை விதைகள் நடுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

பெரும் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் ராமேஸ்வரத்தில் ஜடாயு தீர்த்தம் மற்றும் மாரியூர் காடுகளில் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3.94 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. விவசாயிகளது நிலங்களின் வரப்புகளில் வேளாண்மைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 25,000 மரக்கன்றுகள் இந்தாண்டு நடப்படவுள்ளது. இதில் 50 சதவிகித தொகையை விவசாயிகள் ஏற்க வேண்டும். இதற்காக வனத்துறை ரூ.10.60 லட்சம் செலவிட உள்ளது.

தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் காடு வளர்ப்புத் திட்டத்தில் ரூ.10.60 லட்சம் செலவில் மாவட்டத்தில் 73,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக வேம்பு, புங்கை, தேக்கு, வாகை, சீதாப்பழ மரங்கள், பூவரச மரங்கள் நடப்படுகிறது. இதேபோல மாவட்டத்தில் பனை வளர்ப்புத் திட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வாலிநோக்கம் ஆகிய வனப்பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடும் பணியையும் தொடங்கியிருக்கிறோம். இதற்காக அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக பல்வேறு திட்டங்களின் மூலமாக 1.22 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வனத்துறை சார்பில் நடந்து வருகிறது.

குறிப்பாக கடல் அரிமானத்தை தடுத்து தீவுகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் பறவைகளுக்குப் பயன்படும் வகையிலும் பனை வளர்ப்புத்திட்டம் மூலமாகப் பனை விதைகள் நடும் திட்டத்தை துவங்கியிருக்கிறோம். ஒருங்கிணைந்த வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் தீவுகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பனைமரம் வளர்ப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு தீவுகளில் மட்டும் 1,500 மரக்கன்றுகளும், 8400 பனை மர விதைகளும் நடப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தீவுகளில் வளரக்கூடிய வகையிலான பூவரசு, புங்கன், வேம்பு ஆகிய மரக்கன்றுகள் ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் வரும் குருசடைத்தீவு, மனோலித் தீவு, அப்பாத்தீவு, முள்ளித்தீவு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள காசுவாரி தீவு, வான்தீவு ஆகியவற்றில் நடும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

தீவுகளில் மரங்களை வளர்க்கத் தேவையான செம்மண், உரம், இயற்கை உரம் ஆகியன படகுகளில் கொண்டு செல்லப்பட்டு நல்ல முறையில் மரங்கள் வளரும் வகையில் மரங்கள் நடும் பணிகள் நடந்து வருகிறது. அதிக நீர் தேவை இன்றி வளரும் பனை விதைகள் மழைக்காலத்தில் நடப்படுவதன் மூலம் விரைவான வளர்ச்சியைப் பெறும்'' என்றார்.