வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:10:12 (10/10/2018)

சேலத்தில் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை! - இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ

வெள்ளிப்பட்டறை கூலித் தொழிலாளியும், காவல் உதவி ஆய்வாளரும் கள்ளக் காதல் தகராறில் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி, கட்டி உருண்டு சண்டைபோட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அந்த காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

எஸ்.ஐ

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலைவாசன். இவர், வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி மணிமேகலை. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடந்துவந்தது. இவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்துவந்தனர். மணிமேகலை, சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் சென்று, தனது கணவர் தினமும் அடித்து உதைத்து கொடுமை செய்வதாகப் புகார் கொடுத்தார். மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் விசாரித்தார். பின்னர், கலைச்செல்வன் அடிக்கடி மணிமேகலை வீட்டுக்குச் சென்று, வழக்கு குறித்து விசாரித்து வந்தார். இதனால், மணிமேகலையும் கலைச்செல்வனும் நெருங்கிப் பழகிவந்தனர். இதை அறிந்த கணவர் மலைவாசன், மணிமேகலையைக் கண்டித்தார்.

பின்னர் மலைவாசன், காவல் உதவி ஆய்வாளர் கலைசெல்வனைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மணிமேகலைக்கும் மலைவாசனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியே வசித்துவந்தனர்.மணிமேகலை வீட்டுக்கு அடிக்கடி காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் வந்துசென்றார். அப்போது மணிமேகலையின் மகள், தன்னை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக, தந்தை மலைவாசனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாசன், மனைவி வீட்டுக்குச்  சென்று தகராறுசெய்தார். இதை அறிந்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் வந்து, மலைவாசனை அடித்து உதைத்தார்.

பின்னர், மணிமேகலையும் கலைசெல்வனும் சேர்ந்து மலைவாசனை வீட்டில் சிறைவைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலைவாசன், வெளியில் வர முடியாமல் ஜன்னல் வழியாகத் தன்னை காப்பாற்றுமாறு கூறி சத்தமிட்டுள்ளார். மலைவாசனின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவைத் திறந்து அவரைக் காப்பாற்றினர். பிறகு, மலைவாசனும் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வனும் ரோட்டில் கட்டி உருண்டு சண்டைபோட்டனர். இருவரையும் பொதுமக்கள் சமாதானம் செய்தனர். பின்னர், பொதுமக்கள் மலைவாசனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்தச் சம்பவம்குறித்து அன்னதானப்பட்டி போலீஸில் மலைவாசன் புகார் அளித்துள்ளார். 

 இச்சம்பவத்தை அறிந்த சேலம் காவல் ஆணையாளர் சங்கர், அன்னதானப்பட்டி உதவி ஆய்வாளர் கலைச்செல்வனை உடனே வீராணம் காவல் நிலையத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வனிடம் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.