வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:09:08 (10/10/2018)

"சொத்தை ஜப்தி செய்யட்டுமா?" - சிம்புவுக்கு கோர்ட் எச்சரிக்கை!

திரைப்படத்திற்கான முன் தொகையை நடிகர்  சிம்பு திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவரது சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பேஷன் மூவி மேக்கர்ஸ்'  நிறுவனம் சார்பில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதில், ``நடிகர் சிம்பு நடிப்பில், 'அரசன்' என்ற பெயரில் படம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. சிம்புவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முன் பணமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி சிம்பு செயல்படவில்லை. எனவே, முன் தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி சிம்புவுக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை, சிம்புவின் சொத்துக்களை முடக்கிவைக்க வேண்டும்'' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் ,``வாங்கிய முன் பணம் 50 லட்சம் ரூபாய் மற்றும் வட்டியாக, 35.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 85.50லட்சம் ரூபாய்க்கு, நான்கு வாரங்களில் சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவரது வீட்டுப் பொருள்களான ஃப்ரிஜ், சலவை இயந்திரம், கட்டில், சோபா, குளிர்சாதனப் பெட்டி, 'டி.வி' உள்ளிட்டவற்றை முடக்க நேரிடும். மேலும், அவரது கார், மொபைல் போனும் முடக்கிவைக்கப்பட வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் வட்டி செலுத்த வேண்டும் என்று இல்லை. எனவே உத்தரவை மாற்றியமைக்கும்படி சிம்பு தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து, உத்தரவை மாற்றி அமைத்த நீதிபதி, ''50 லட்சத்தை வரும் 31-ம் தேதிக்குள் சிம்பு திரும்ப செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.