வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (10/10/2018)

கடைசி தொடர்பு:09:57 (10/10/2018)

"பாப்பாவை கண்டுபிடிச்சுக் கொடுங்க... ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்!" - 'இணைந்த கைகள்' அமைப்பிடம் உருகிய ஹரிணியின் பெற்றோர்!

விகடன் இணையதள வாசகர்களுக்கு ஹரிணி பாப்பாவைப் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் மகள்தான் ஹரிணி. நாடோடி இனத் தம்பதிகளான இவர்கள், பாசி மணி, ஊசி விற்கப் போன இடத்தில் ஹரிணியைப் பறிகொடுத்துவிட்டு ஒரு மாதமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "இந்த அப்பாவித் தம்பதியின் இரண்டு வயது மகள் ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு தருகிறோம்" என்று அறிவித்து, இந்தத் தம்பதிக்கு பேருதவி செய்திருக்கிறது கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பு. "ஹரிணி பாப்பாவை கண்டுபிடிச்சு தாங்கய்யா. உங்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்!" என்று அந்த அமைப்பிடம் ஹரிணியின் பெற்றோர் கண்ணீரோடு கேட்டு நெஞ்சைக் கனக்க வைத்திருக்கிறார்கள்.

 ஹரிணி

இந்தத் தம்பதி, ஒரு மாதத்துக்கு முன்பு, தங்கள் மகள் ஹரிணியோடு கடப்பாக்கம் அருகே உள்ள இடைக்கழிநாடு கிராமத்தில் நடந்த அம்மன் கோயில் திருவிழாவுக்கு பொருள்கள் விற்கப் போயிருக்கிறார்கள். திருவிழா முடிந்ததும் ஆட்டோவில் ஊருக்குக் கிளம்பி இருக்கிறார்கள். அப்போது, ஆட்டோ லைட் பிரச்னை கொடுக்க, அங்கே உள்ள காவல் நிலையத்தின் முன்பாக குடும்பமே உறங்கி  யிருக்கிறது. காலையில் எழுந்து பார்த்தபோது, ஹரிணி தொலைந்து போயிருக்கிறாள். கண்ணீருடன் அல்லாடியபடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கடந்த மாதம் 23 -ம் தேதி விகடன் இணையதளத்தில்,"புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்" கலங்கும் நாடோடி பெற்றோர்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஒரு மாதம் கடந்தும் காவல் துறை ஹரிணியைக் கண்டறியாமல் கைவிரிக்க, அந்தத் தம்பதிக்கு அவஸ்தை கூடியது.  இந்நிலையில் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் அல்லலைத் துடைக்க, ''ஹரிணி பாப்பாவை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு!" என்று அறிவிப்பதாகச் சொல்லியிருந்தது 'இணைந்த கைகள்' அமைப்பு. இந்தத் தகவலையும் விகடன் இணையதளம்தான் கடந்த 8-ம் தேதி,''ஹரிணி பாப்பாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு!" - கரூர் தன்னார்வலர்கள் அறிவிப்பு என்ற தலைப்பில் முதலில் பதிந்தது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூரில் இருந்த வெங்கடேசன்,காளியம்மாள் தம்பதியை இணைந்த கைகள் அமைப்பினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பெற்றோர்

அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீம், "வெங்கடேசன், காளியம்மாள் தம்பதி தங்கள் மகள் ஹரிணியை இழந்து தவிக்கும் அல்லலை விகடன் இணைதளத்தில் படித்த கணத்தில் இருந்து நாங்களும் நொறுங்கித்தான் கிடக்கிறோம். அந்தக் குழந்தை பற்றிய தகவலை எல்லா சமூக வலைதளங்களிலும் பதிந்திருக்கிறோம். அதோடு, 'இந்த விசயத்தை படிப்பவர்கள், ஹரிணியை சீரியஸாகத் தேட வைக்கத்தான், 'ஹரிணியை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஒரு லட்சம் பரிசு தர்றதா அறிவிக்கலாம்'னு தோணுச்சு. இன்னைக்கு அந்தத் தம்பதியை பவுஞ்சூரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவங்க குடும்பச் சூழலை பார்த்ததும் எங்களுக்கு அழுகையே வந்துட்டு. எங்க கையைப் புடிச்சுகிட்ட வெங்கடேசன், 'என் மார்புல படுத்துதான் தூங்குவா சார். அனைக்கும் அப்படித்தான் தூங்கினா. விடிஞ்சு பார்த்தா காணலை. என்னை ஆறுதல் படுத்திக்கலாம். ஹரிணியைப் பெத்த என் பொண்டாட்டியை தேத்தவே முடியலங்க. ராப்பகலா சோறு உண்ணாம, கண்ணுல பொட்டுத் தூக்கம் இல்லாம அரற்றிக்கிட்டே கிடக்கா. எங்க ரெண்டாவது குழந்தை இரண்டு மாசமா அவ வயித்துல வேற வளருது. இந்த நேரத்துல அவ முத குழந்தையை நெனச்சு மருகி நிப்பது உடம்புக்கு நல்லது  இல்லைங்களே. 'பத்திரிகையில பேட்டி கொடுத்தா அவ்வளவுதான்'னு போலீஸ்காரங்க மிரட்டுறாங்க. எங்க ஹரிணி பாப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சுத் தாங்க சாமி. உங்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்'ன்னு எங்களைக் கலங்கடிச்சுட்டார். 'எப்படியும் ஹரிணி பாப்பாவை மீட்டே தீருவது'ன்னு களத்தில் இறங்கியிருக்கிறோம். இந்தத் தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் என்று எல்லா வகையான சமூக வலைதளங்களிலும் இன்னைக்குள்ள பதிவா போட இருக்கிறோம். தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம், அரபின்னு நான்கு மொழிகளில் பதிவைப் போட இருக்கிறோம். மீடியா மூலமாகவும் இந்தத் தகவலை மக்களிடம் கொண்டுபோக இருக்கிறோம். இந்தச் செய்தியைப் படிப்பவர்கள், இதை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பணும். எப்படியாவது ஹரிணியை மீட்டுக் கொடுத்து, அந்த நாடோடித் தம்பதியின் கனத்த சோகத்தைத் துடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஹரிணி பாப்பாவை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து, இந்தத் தம்பதியிடம் சேர்த்தபிறகுதான் நாங்க நிம்மதியா தூங்குவோம்" என்றார்.