வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (10/10/2018)

கடைசி தொடர்பு:11:06 (10/10/2018)

'ஒரு லட்சம் கையெழுத்து!'' - ராஜீவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலைக்கு 'செக்'

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற பரவலான கோரிக்கைகளுக்கு மத்தியில், `அவர்களை விடுதலை செய்யக் கூடாது' என்று 1 லட்சம் கையொப்பம் வாங்கி ஆளுநருக்குக் கோரிக்கை வைக்கவும் மறுதரப்பு தயாராகிவருகிறது.

'ஒரு லட்சம் கையெழுத்து!'' - ராஜீவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலைக்கு 'செக்'

`ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்', `விடுவிக்கக் கூடாது' என்று மாறி மாறி குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி சென்னையை அடுத்துள்ள ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பல ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் முடிவில், இந்தச் சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில், கடந்த 28 ஆண்டுகளாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம், `ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம்; அதற்குத் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம்' என்றும் உத்தரவிட்டது. 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகம் முழுக்க பலத்த உணர்ச்சியலைகளை எழுப்பியது. நீண்டகாலமாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர்கள் 7 பேரையும் விடுவிக்கக்கோரி ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் அரசியல் இயக்கங்களும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
இதையடுத்து தமிழக அரசும் `எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. `எழுவரும் விடுதலையாகி வெளிவரும் நன்னாளை எதிர்நோக்கி தமிழார்வலர்களும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ராஜீவ் கொலை வழக்கு

எனவே, தீர்மானத்தின் மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பரவலாக எழுந்து வருகிறது. ஆனால், வழக்கம்போல் இந்த முறையும் எழுவரை விடுவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுவருவதையடுத்து தமிழார்வலர்கள் மத்தியில் கனத்த சோகம் நிலவுகிறது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது, அவருடன் இறந்த பல்வேறு நபர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் ஒருங்கிணைந்து, `ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது' என்று எதிர்க் குரல் எழுப்பி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக ஆளுநரிடமும் இதுகுறித்த மனு ஒன்றை இவர்கள் அளித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 6 ம் தேதி, ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆளுநருக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் கலந்துகொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், `எழுவர் விடுதலையை வலியுறுத்தி' விரைவில் ஆளுநருக்குத் தங்கள் கட்சியின் சார்பில், 1 லட்சம் தபால் அட்டைகளை அனுப்பவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு, ராஜீவ் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குப் பேரிடியாக உள்ளது. இவர்களும் தங்கள் பங்குக்கு, `எழுவரையும் விடுதலை செய்யக்கூடாது' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சம் பேரிடம் கையொப்பம்  வாங்கி அதனை ஆளுநருக்கு அனுப்பவிருப்பதாகக் கூறிவருகின்றனர்.
ராஜீவ் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒருங்கிணைத்துப் போராடிவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்பாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ``தென்செங்கை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த என் அம்மா சந்தானபேகமும் ராஜீவ் படுகொலையின்போது இறந்துபோனார். ஏற்கெனவே தந்தையை இழந்திருந்த எங்கள் குடும்பம் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தாயையும் இழந்து, ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டோம்.
நாங்கள் ஏற்கெனவே ஆயிரம் பேரிடம் ரத்தக் கையொப்பம் வாங்கிவந்து ஆளுநரிடம் கொடுத்துத்தான், `எழுவர் விடுதலை கூடாது' என்ற  கோரிக்கையையே வைத்திருந்தோம். இப்போது, விடுதலையை ஆதரிப்பவர்களும் 10 ஆயிரம் கையொப்பம், 1 லட்சம் கையொப்பம் என்று ஆளுநருக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 
அந்தச் சம்பவத்தினால் எங்கள் உறவுகளைப் பறிகொடுத்துவிட்ட நாங்களும் தமிழர்கள்தான். ஆனால், எங்களது வலியைப் பற்றி யாருமே கவலைப்பட மாட்டேன் என்கிறார்களே.... எனவே இனி நாங்களும் இந்தியா முழுக்க 1 லட்சம் கையொப்பம் வாங்கி ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் என்று அனைவரிடமும் `இவர்களை விடுதலை செய்யக் கூடாது' என்று கோரிக்கை வைக்கப்போகிறோம்.'' என்றார் ஆதங்கத்துடன்!


டிரெண்டிங் @ விகடன்