வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (10/10/2018)

கடைசி தொடர்பு:11:41 (10/10/2018)

பிறந்தநாளில் காதலியை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்! விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, காவலர் ஒருவர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ்காரர் வேலு- காதலி சரஸ்வதி

விழுப்புரம் மாவட்டம், அன்னியூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரஸ்வதி. கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் முதலாமாண்டு படித்திருக்கிறார். அப்போது, சென்னை கமாண்டோ போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் வேலு என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு  ஏற்பட்டிருக்கிறது. நட்பு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். 2016-ம் ஆண்டு, அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால், நர்ஸிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர்ந்திருக்கிறார்.

இறந்துக்கிடக்கும் காதலன்- காதலி

இவர்களின் காதல், இருவர் வீட்டுக்கும் தெரிந்த நிலையில், படித்து முடித்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றனர். இதற்கிடையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த நான்கு மாதமாக கார்த்திக் வேலுவிடம் பேசுவதை தவிர்த்துவந்திருக்கிறார் சரஸ்வதி. நேற்றைய தினம் (09.10.2018) சரஸ்வதிக்கு பிறந்தநாள் என்பதால், அதைக் கொண்டாட முதல் நாள் திங்கள்கிழமை (08.10.2018) வீட்டுக்கு வந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட கார்த்திக் வேலு, பிறந்தநாள் கேக் வாங்கிக்கொண்டு நேற்று இரவு 11.30 மணிக்கு சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த சரஸ்வதி, `எதற்காக இங்கு வந்தாய்' என்று கூறி சண்டை போட்டுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கொலை நடந்த வீடு

சரஸ்வதியின் தந்தை மற்றும் சகோதரியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குவாதம், நள்ளிரவைத் தாண்டியும் நீடித்திருக்கிறது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த கார்த்திக் வேலு, தான் கொண்டுவந்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார். தோட்டாக்கள் நெஞ்சில் பாய சுருண்டுவிழுந்து இறந்தார் சரஸ்வதி. அவர் இறந்துவிட்டதை அறிந்துகொண்ட கார்த்திக் வேலுவும் அடுத்த சில விநாடிகளில் தனது நெற்றியில் துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு, சரஸ்வதியின் அருகிலேயே விழுந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, சம்பவத்துக்கான காரணம்குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க