வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:15 (10/10/2018)

வறுமையால் பணிக்காலத்தை நீட்டித்த குமரி ராணுவ வீரர்! தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளுடம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான குமரி ராணுவ வீரரின் உடல், இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

குமரி ராணுவ வீரர் ஜெகன்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த கோழிப்போர்விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (39). 16 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில்  சேர்ந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர்  திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி சுபி இப்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். ராணுவத்தில் இணையும்போது 15 ஆண்டுகள் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்திருந்தார். குடும்ப வறுமை காரணமாகக் கடந்த ஆண்டு பணிக்காலம் முடிந்த பிறகும் பணி நீடிப்பு கேட்டு வாங்கினார்.

கடந்த மாதம் ஊருக்கு வந்துசென்றவர், ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான பத்ரோடியில், கடந்த 8-ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவரது உடல், இன்று காலை 11.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு விமான நிலையத்தில் வந்துசேரும் உடல், நாளை காலை 6 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும். எல்லையில் வீர மரணம் அடைந்த ஜெகனின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலிசெலுத்துவார்கள்.