வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:45 (10/10/2018)

தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி! - ரஜினி ரசிகர் மன்றத்தில் 15 பேர் அதிரடி நீக்கம்

ரஜினி மக்கள் மன்றத் தலைமைக்கு எதிராகக் கொடிபிடித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், மன்றத்தை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தலைமையின் இந்தச் செயல், ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி ரசிகர் மன்ற அறிவிப்பு

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகக் கூறி 10 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும், அவர் தனது கட்சியின் பெயரைக்கூட அறிவிக்கவில்லை. இதனிடையே,  ரஜினி ரசிகர் மன்றங்கள் 'ரஜினி மக்கள் மன்றம்' என மாற்றம் செய்யப்பட்டது. அதற்கென மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நிர்வாகிகள் நியமனம் முழுமை அடைவதற்கு முன்பாகவே, சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. 

பல ஆண்டுகளாக ரசிகர் மன்றங்களில் இருந்து வரும் நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, தனக்கு வேண்டப்பட்டவர்களை அந்தப் பதவிகளில் நியமித்துவருவதாக, ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிலைய நிர்வாகியாக இருந்துவரும் இளவரசன் மீது புகார் எழுந்துள்ளது. இளவரசனால் கடந்த வாரம் பதவிநீக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர், சென்னையில் ரஜினி வீட்டின் முன் கூடி தங்கள் ஆதங்கத்தை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர். 

 இந்நிலையில், இளவரசனுக்கு எதிராகக் கொடிபிடித்த காரணத்தால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ராமநாதபுரம் ராமச்சந்திரன் என்ற பாபு, திண்டுக்கல் தம்புராஜ், கடலூர் பெரியசாமி, புதுக்கோட்டை குணசேகரன், விருத்தாசலம் தென்றல் முருகன், நெல்லை செல்வகுமார், விழுப்புரம் இப்ராகிம் உள்ளிட்ட 15 பேர்களை ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். 2.0 பட இறுதிக் கட்ட பணிகளில் ரஜினி ஈடுபட்டுள்ள நிலையில், அவரது பெயரில் இயங்கிவரும் மக்கள் மன்றம் மற்றும் ரஜினி மன்றங்களில் நிலவும் பிரச்னைகள் உச்சத்தை எட்டியுள்ளது. 

 இந்நிலையில், வரும் 20-ம் தேதி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை ரஜினி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.