வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (10/10/2018)

கடைசி தொடர்பு:13:05 (10/10/2018)

பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து பாக்குமட்டை பாக்ஸில் பேக்கிங்! - அசத்தும் கரூர் பெண்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சமையல் பொடிகளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து பாக்கு மட்டையால் ஆன பெட்டியைப் பயன்படுத்துவது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

பாக்கு மட்டையில் சமையல் பொடி

இன்று நாடு, மொழி என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் குடைச்சல் கொடுக்கும் விசயமாக இருப்பது பிளாஸ்டிக்தான். காற்று போல எங்கும் இந்த வஸ்து நீக்கமற நிறைந்து, மனிதர்களுக்கு எண்ணற்ற இன்னல்களை கொடுத்து வருகிறது. இதன் மோசமான வீரியம் உணர்ந்த தமிழக அரசு வரும் ஜனவரி 1 ம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை போட்டிருக்கிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் பொடிகளை சொந்தமாகத் தயாரித்து விற்பனை பெண் ஒருவர், பேக்கிங்கிற்காக இதுவரை பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வந்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இப்போது பேக்கிங்கிற்காக பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து பாக்கு மட்டைகளால் ஆன சிறிய பெட்டிகளை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சியைச் சேந்த காமிலா என்ற பெண்தான் அவர். கரூரில் உள்ள டெக்டைல்ஸ் ஒன்றில் மேற்பார்வையாளராக இருக்கும் இவர், தனது கணவரோடு பார்ட் டைமாக சமையல் பொடிகளை தயாரித்து உள்ளூரில் விற்பனை செய்யும் சிறிய அளவிலான தொழிலை செய்து வருகிறார்.

கரூர் பெண் கமிலா

சமையல் பொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காமிலாவிடம் பேசினோம். ``எங்களுக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை. பிழைப்புக்காக நானும், என் கணவரும் சில வருடங்களுக்கு முன்பு கரூர் வந்து செட்டிலாயிட்டோம். ரெண்டு பேரும் கரூர்ல உள்ள டெக்ஸ்டைல்ஸ்ல வேலை பார்க்கிறோம். வருமானம் பத்தலை. அதனால், கடந்த 10 மாசமா இப்படிச் சமையல் பொடிகளை தயார் பண்ணி விற்பனை பண்ணிடிக்கிட்டு வர்றோம். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மசாலா பொடிக்கள்ன்னு 18 வகையான சமையல் பொடி, தூள்களை சொந்தமான அரைத்து, சமீரா மசாலாங்கிற பெயர்ல விற்பனை செய்றோம். இந்தப் பகுதியில் உள்ள 50 வீடுகள், கரூர், வேலாயுதம்பாளையம், பாலத்துறையில இருக்கிற இருபதுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ஹோல்சேலாகன்னு விற்பனை செய்கிறோம். ஆரம்பத்துல தினமும் 10 பாக்கெட்கள்தான் விற்பனை செஞ்சோம். இப்போ தினமும் 100 பாக்கெட் விற்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறோம். பார்ட் டைமாதான் இந்தத் தொழிலை பார்க்கிறோம்.

சமையல் பொடி, தூள்களை பிளாஸ்டிக் கவர்களில்தான் அடைத்து விற்பனை செய்தோம். ஆனா, இயற்கையாகவே இயற்கை குறித்து எங்களுக்கு அதிக விழிப்புஉணர்வு இருந்துச்சு. அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும்ன்னு நினைச்சோம். கேரளாவுல போய் பாக்கு மட்டைகளில் செய்யப்படும் பேக்கிங் பாக்ஸ்களை பீஸ் ஒண்ணு 10 ரூபாய்ன்னு வாங்கிட்டு வந்து அதுல அடைச்சு விற்பனை செய்றோம். அதேபோல், மத்த வேலைகளுக்கும் பாக்குமட்டை தட்டுகளையே பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் கவர் ஒண்ணு 50 பைசாதான். ஆனால், இந்தப் பாக்கு மட்டை பாக்ஸ் ஒண்ணு 10 ரூபா. அதுக்காக நாங்க சமையல் பொடிகளின் விலையை ஏத்தலை. மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் பற்றி விழிப்புஉணர்வு வரும் வரை இப்படிப் பழைய ரேட்டிலேயே சமையல் பொடிகளை விற்பனை செய்ய இருக்கிறோம்" என்றார்.