வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (10/10/2018)

''இளவரசி டயானா விருது கிடைச்சிருக்கு'' - பூரிப்பில் 'தங்க மீன்கள்' சாதனா

சாதனா

'தங்கமீன்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், சாதனா. அந்தப் படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதுவென்றார். தற்போது, சமூக சேவைக்கான 'இளவரசி டயானா' என்ற விருதையும் வென்றிருக்கிறார். 

"நான் துபாயில் வசிக்கிறேன். 'பேரன்பு' படத்தில் நடிக்கும்போது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு கிடைச்சது. அவங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நான் படிக்கும் பள்ளியில், சில மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கிறாங்க. என் பள்ளி நேரம் முடிந்ததும், அவங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது, பேச்சுப் பயிற்சி, டான்ஸ் கற்றுக்கொடுப்பது எனப் பல பயிற்சிகளை இரண்டு வருடங்களாகச் செய்துட்டிருக்கேன். இப்போ, பிளஸ் ஒன் படிப்பில் சைக்காலஜி குரூப் படிக்கிறேன்.

பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக, சமூக மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் 9 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, ஆண்டுதோறும் 'இளவரசி டயானா' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, என் பெயரை எனது பள்ளி நிர்வாகம் அனுப்பியது. அதில், இந்த வருஷம் விருதுவென்ற 50 பேரில் நானும் ஒருவர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவிசெய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கிட்டேன். என்னைவிட சிறப்பாக சேவைசெய்யும் பலர், இந்தியா உட்பட, உலகம் முழுக்க இருக்காங்க. அவங்களுக்கு இந்த விருது கிடைக்கணும். அது, அவங்களுக்கும் சேவை செய்ய நினைப்பவர்களுக்கும் ஊக்கமாக அமையும். இந்த விருதுமூலம், 'இளவரசி டயானா அறக்கட்டளை', அடுத்த ஓர் ஆண்டுக்கு உலகில் எந்த நாட்டில் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தினாலும், நானும் கலந்துகொண்டு பேச வாய்ப்பு கிடைக்கும்" என மகிழ்ச்சியுடன் சொன்னார் சாதனா