வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:36 (10/10/2018)

கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை தசரா விழா! காப்புக் கட்டிய வேடமணியும் பக்தர்கள்

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில்  தசரா பெருந்திருவிழா, இன்று காலை மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை தசரா விழா

இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா, விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று (9-ம் தேதி) காலை காளி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.  இன்று காலை, யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து,  கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும், அதன் பின் கொடியேற்றமும் தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்துக்குப் பின்னர், வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.

 காப்பு கட்டிய வேடமணியும் பக்தர்கள்

திருவிழாவின் 2-ம் நாளான 11-ம் தேதி இரவு 9 மணிக்கு, கற்பக வாகனத்தில் விஸ்வகாமேஸ்வரர் அலங்காரத்திலும், 3-ம் நாளான 12-ம் தேதி, ரிஷப வாகனத்தில் பார்வதி அலங்காரத்திலும், 4-ம் நாளான 13-ம் தேதி, மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும்,   5-ம் நாளான 14-ம் தேதி, காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-ம் நாளான 15-ம் தேதி சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 7-ம் நாளான 16-ம் தேதி, பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் அலங்காரத்திலும், 8-ம் நாளான 17-ம் தேதி, கமல வாகனத்தில் கஜலெட்சுமி அலங்காரத்திலும், 9-ம் நாளான 18-ம் தேதி,  அன்ன வாகனத்தில் கலைமகள் அலங்காரத்திலும், 10-ம் நாளான 19-ம் தேதி, முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துவருகின்றது.

தசரா திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 5 லட்சம் பக்தர்கள் மகிஷா சூரசம்ஹாரம் அன்று குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள். இதில், பல பகுதிகளில் இருந்தும் வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

நீங்க எப்படி பீல் பண்றீங்க