வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (11/10/2018)

`மக்களிடம் கருத்து கேட்கக் கூடாது' - 2006 அறிக்கையைத் திருத்த தமிழக அரசு வலியுறுத்தல்!

'கெயில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை அவசியம் கேட்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையில் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்' என தமிழக அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருக்கிறது. 

ஹைட்ரோகார்பன்

இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதில், மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்கள் வேதாந்தா நிறுவனமும்  இரண்டு இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது. இவற்றில் மூன்று இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றுள்ளன. இதற்கு, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி கையெழுத்தானது.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதை அறிவித்த நாளில் இருந்தே தமிழக மக்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'கெயில், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கவேண்டியது அவசியம் இல்லை  என சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையில் திருத்தம்செய்ய வேண்டும்' என தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை மத்திய அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசிய தமிழக அமைச்சர் கருப்பணன், '2006 - ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், 'சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு, மக்களின் கருந்தைக் கேட்பது அவசியம்' என இருக்கிறது. ஆனால் தற்போது, பொதுமக்களிடம் கருத்து கேட்கும்போது பெரும் எதிர்ப்புகள் எழுகின்றன. எனவே, அதிகமான இழப்புகளைச் சந்திக்கவேண்டி இருக்கிறது. அதனால், பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை  என திருத்தம் செய்ய வேண்டும் ' என்று வலியுறுத்தி இருக்கிறார்.