வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:17 (11/10/2018)

`குகன் தலையில கல்லைப் போட்டு கொன்னுட்டாங்க!' - பதறிய கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள்

கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த கொலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், குகன் என்பவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு, 'சார், மார்க்கெட் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செஞ்சுட்டாங்க' என்று இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்றனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். 

விசாரணையில், அவரின் பெயர் கருப்பு என்கிற குகன் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. அவரின் முகவரி, அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், குகன், மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், மார்க்கெட் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களிடம் குகன் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இந்த நிலையில், கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில் கிடைத்த தகவலின்படி, சிலரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பாலியல் தொழில் சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. இதனால், குகன் கொலைக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கோணத்திலும் விசாரித்துவருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்டவரின் பெயர் கருப்பு என்கிற குகன் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது. அவரின் தலையில் கல் போடப்பட்டுள்ளதால், முகம் சிதைந்து காணப்படுகிறது. மேலும், அவரின் உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள் உள்ளன. கைரேகை பதிவாகியிருந்த கல்லையும் பறிமுதல்செய்துள்ளோம். விரைவில் கொலையாளி யார் என்று தெரிந்துவிடும்" என்றனர்.