வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:32 (10/10/2018)

`உழைத்த களைப்பைப் போக்குது வடிவேல் காமெடி'- பூரிக்கும் அரவக்குறிச்சி விவசாயி

 " ' புண்பட்ட நெஞ்சைப் புகை விட்டு ஆத்து'ன்னு சொல்வாங்க. ஆனா, அது உடம்புக்கு நல்லதில்லைங்களே தம்பி. அதனால, என்னோட துக்கத்தை, உழைச்ச களைப்பை வடிவேல் காமெடிய டி.வி-யில பார்த்து போக்கிக்கிறேன்" என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார் நரசப்பன்.

விவசாயி நரசப்பன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பக்கமுள்ள ரெங்கப்பகவுண்டர் வலசையைச் சேர்ந்தவர் நரசப்பன். இரண்டு ஏக்கர் நிலத்தை வருடக் குத்தகைக்கு எடுத்து, அதில் பேய் பாடாக உழைக்கும் விவசாயி. "பத்து தலைமுறையா விவசாயம் பார்க்கிறோம். ஆனா, காக்காணி சொந்தமா நிலம் வாங்க முடியலை. சொந்தமா நிலம் வச்சிருக்கிறவங்க பொழப்பு மட்டும் ராஜா கணக்காவா இருக்கு? மூணு வேளை சோத்துக்கே வக்கத்து, அஞ்சுக்கும் பத்துக்குமே அல்லாடுற நிலைமையில்தான் இருக்கு. எனக்கு சொந்த ஊர் இது கிடையாது. நாலஞ்சு வருஷதுக்கு ஒரு ஊர்ன்னு குடும்பத்தோட போய் வருடக் குத்தகைக்கு நிலத்தைப் புடிச்சி விவசாயம் பார்க்கிறதுதான் பொழப்பு. இந்த பகுதியே வானம் பார்த்த பூமி. பாலைவனத்துல வெள்ளாமை போடுற வங்கொடுமையான நிலைமை. வீட்டுல மூணு புள்ளைங்க. அதுல ஒண்ணு கல்யாணதுக்குக் காத்திருக்கு. பொட்டுத் தங்கம் இல்லை. சேமிப்புனு ஒத்த ரூபா இல்லை. வயல்ல வர்ற வருமானம் குத்தகை கொடுக்கக்கூட பத்தறதில்லை. வீட்டுல இருந்து குண்டுமணி தங்கமும் அடகுக்கடையில் இருக்கு. இருந்தாலும் மண்வெடியத் தூக்கிட்டு, 'நானும் விவசாயம் பார்க்கிறேன்'னு பொழுது பொலர்ந்தா கிளம்பிடுறேன். உங்க எங்க கஷ்டமில்லை தம்பி. சொல்லமுடியாத கஷ்டம்.

முன்னாடி, ஊர்ல திருவிழா காலங்களில் பத்து நாளைக்கு நாடகம் போடுவாங்க. உழைச்சுக் களைச்சு கிடக்கும் நாங்க, நாடகங்களை பார்த்து உற்சாகமாவோம். 'வள்ளித் திருமணம்', 'சத்தியவான் சாவித்திரி', 'அரிச்சந்திர மயானகாண்டம்', 'தூக்கு தூக்கி'ன்னு ஏகப்பட்ட நாடம் போடுவாங்க. ஆனா, தண்ணி வத்திப் போய் ஊரே வறண்டு கிடக்கு. அப்புறம் ஏது நாடகம். அதனால், டி.வி-யில கொஞ்ச நேரம் வடிவேல் சிரிப்புகளைப் பார்ப்போம். அதுதான் எங்க அசதி தீர்க்கும் ஒத்தடம். எவ்வளவு மனக்கஷ்டத்தையும், உழைச்சுக் களைச்சு வரும் உடல் அசதியையும் அவரோட காமெடிக் காட்சிகள்தான் புதுத் தெம்பக் கொடுக்கும். சமயத்துல, சோறு தண்ணிக்கு வழியில்லன்னா, அவரோட காமெடியை பார்த்துக்கிட்டே பசியைக் கடந்துருவோம். எத்தனை கஷ்டத்துலயும் துன்பத்துலயும்,சாவனும்ங்கிற எண்ணம் வராம எங்களை போன்ற ஏழைபாழைங்கள வாழ வைக்கிற தெம்பு, தைரியம், வடிவேலு பேசுற வார்த்தைகள்தான் தம்பி. எம்.ஜி.ஆருக்கு பொறவு, எங்க மனம் கவர்ந்த மவராசன் வடிவேல்தாம்யா. இன்னைக்கு அவருக்கு பொறந்தநாளா... மக்களோட கஷ்டத்தைப் போக்குற அவரு, நூறாயிசுக்கு மேல வாழணும்" என்றார் நெக்குருகி!