வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (10/10/2018)

`3,000 காவலர்கள் கண்காணிப்பார்கள்; 29 இடத்தில்தான் பக்தர்கள் நீராடணும்!' - தூத்துக்குடி எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு 29 இடங்களில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி முரளி ரம்பா தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், “தாமிரபரணி மஹா புஷ்கரணி விழா நாளை 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம் ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் கோயில் அருகில் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி திருசங்கனை, அகோபில்லா, காந்தீஸ்வரர், பட்சிராஜன், நாயக்கர், பிள்ளையார் கோயில், தோணித்துறை, பால்குளம், தென்திருப்பேரை, குரங்கணி, ஏரல், இரட்டைத் திருப்பதி, மங்களக்குறிச்சி, சேர்மன்கோயில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழக்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 2 இடங்கள், சேர்ந்தபூமங்களத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகள் பக்தர்கள் நீராடும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

29 படித்துறைப் பகுதிகளில் உள்ள எந்தப் படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், 3 எஸ்.பி-க்கள் தலைமையில், 5 ஏ.டி.எஸ்.பி-க்கள், 16 டி.எஸ்.பி-க்கள் உட்பட  3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, சிறப்புப் பயிற்சி பெற்ற 90 போலீஸார் அடங்கிய மீட்புப் பணியினரும், மீன்வளத்துறையிலிருந்து 24 படகுகளும், தீயணைப்புத்துறை மூலம் 3 படகுகளும் மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புனித நீராடும் பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் புனித நீராடுவதற்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க