வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (10/10/2018)

யார் பெரியவன்? - சினிமா பாணியில் ஜாமீனில் வந்த ரவுடியைக் கொல்ல முயன்ற கும்பல்

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. ரவுடிகளுக்கு இடையே முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரவுடி வீச்சு என்கிற தினேஷ்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி வீச்சு என்கிற தினேஷ். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் சந்தோஷ் என்பவரைக் கொலை செய்து பாலாற்றில் புதைத்த வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்தார். அதோடு, ரவுடி பினுவைப் போலவே வீச்சு தினேஷும் தன் பிறந்தநாளை சக ரவுடி நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

இந்த நிலையில், கடந்த மாதம் கஞ்சா விற்பனை மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிப் பதுங்கியிருந்தபோது வீச்சு தினேஷை சத்துவாச்சாரி போலீஸார் குண்டுக்கட்டாக மடக்கிப் பிடித்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், வீச்சு தினேஷுக்கு நேற்று முன்ஜாமீன் கிடைத்ததையடுத்து, இன்று வேலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை நண்பர்கள் காரில் அழைத்துக்கொண்டு தொரப்பாடி எம்.ஜி.ஆர் சிலை அருகே சென்றபோது, சினிமா பாணியில் அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வந்து காரை மடக்கினர். உடனே சுதாரித்துக்கொண்ட தினேஷ் நண்பனிடம் காரை நிறுத்தாமல் ஓட்டச்சொல்லியுள்ளார். கார் நிற்காமல் செல்லவே அந்தக் கும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது.

இதில், காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்தத் தாக்குதலில் தினேஷுக்கும் அவரது நண்பர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குவந்த பாகாயம் காவல்துறையினர் அரிவாள் மற்றும் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர். ஜாமீனில் வெளியே வந்த வீச்சு தினேஷ் பாதுகாப்புக்கோரி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் காருடன் சென்று தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு தினேஷிடம் டி.எஸ்.பி. ஸ்ரீதர் விசாரணை நடத்தினார். விசாரணையில், வேலூரில் நீண்ட நாள்களாக நிலவி வரும் ரவுடிகளுக்கிடையேயான யார் பெரியவன் என்ற போட்டியின் காரணமாகவும் முன் விரோதம் காரணமாகவும் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. 

மேலும் 2 மாதத்துக்கு முன் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி பிச்சை பெருமாள் என்பவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் வீச்சு தினேஷுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நாட்டு வெடிகுண்டு வீசிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடப்பட்டு வருகிறனர். இந்தச் சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ``போலீஸ் தீவிரமாக களத்தில் இறங்கி அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய வேண்டும்'' என்பது வேலூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க