வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (10/10/2018)

கடைசி தொடர்பு:09:26 (11/10/2018)

பணியிடங்களில் பாலியல் சீண்டல்கள் என்றால் என்ன... பெண்கள் என்ன செய்யலாம்?

`நான் அந்த அர்த்தத்தில சொல்லல, செய்யல. நீதான் தப்பாப் புரிஞ்சிகிட்ட. உன் மனசுதான் தப்பா யோசிக்குதுன்னு' அந்தப் பெண் மீதே பழி போடுவார்கள். ஆனால், நீதிமன்ற ஆணை தெளிவாகச் சொல்கிறது. ஆண், எப்படி வேண்டுமென்றாலும் திரிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் இதை எப்படிப் புரிந்துகொள்கிறாரோ அதன் அடிப்படையிலேயே இவற்றை விசாரிக்க வேண்டும் என்கிறது.

பணியிடங்களில் பாலியல் சீண்டல்கள் என்றால் என்ன... பெண்கள் என்ன செய்யலாம்?

#MeToo என்கிற ஹேஷ்டேக் மூலம் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பகிர்ந்து வருகிறார்கள். அமெரிக்காவில் உருவான இந்த ட்ரெண்டிங், தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அகில இந்திய மாதர் சங்க துணைத் தலைவர் உ. வாசுகியிடம் பேசினேன்.

``#MeToo ட்ரெண்டிங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

`` 'பெண்கள் இப்போதாவது பேசத் துணிந்தார்களே' என்று ஆசுவாசமாக இருக்கிறது. அதேசமயம் இத்தகைய துன்புறுத்தல்கள் மேலும் தொடராமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் நமக்கு நிறைய தெளிவும் புரிதலும் அவசியமாகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது பெண்கள் அதிகளவில் வேலைக்குச் செல்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும்விதமாக நீதிமன்றத்தின் ஆணைப்படி, கட்டாயமாக்கப்பட்ட `விசாகா கமிட்டியைப்' பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்." 

பாலியல் தொல்லை

``விசாகா கமிட்டி பற்றி இன்னும் விரிவாகச் சொல்லலாமே...?" 

``பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்விதமாக, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தங்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க, அனைத்து நிறுவனங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்கள் பத்துக்கும் மேல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும். பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளைச் சுற்றறிக்கை மூலம் ஊழியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஊழியர்களேகூட நிறுவனத்தைப் பற்றிப் புகார் செய்யலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விசாகா கமிட்டி நடைமுறைப்படுத்தலில் மிகவும் மோசம். பல நிறுவனங்களில் இந்த கமிட்டி செயல்படுவதில்லை. அவ்வளவு ஏன், ஊடக நிறுவனங்களில்கூட செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சட்டம் இயற்றுவது எளிது. அதை நடைமுறைப்படுத்துவதுதான் மிகச் சிக்கலானது. அதற்கு விசாகா கமிட்டி ஓர் ஆகச்சிறந்த உதாரணம்.'' 

``பணியிடங்களில் எத்தகைய செயல்களை எல்லாம், பாலியல் துன்புறுத்தல்களாகக் கருதி பெண்கள் புகார் அளிக்கலாம்?" 

``விருப்பமில்லாமல் பெண் ஊழியரைத் தொட்டுப் பேசுவது, அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாலியல்ரீதியான செயல்களுக்கு அழைப்பது, உடன்படாத பட்சத்தில் மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, ஆபாசமான படங்களைக் காட்டுவது போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் ஒருவர் செய்துவிட்டு `நான் அந்த அர்த்தத்தில் சொல்லல, செய்யல. நீதான் தப்பாப் புரிஞ்சிக்கிட்ட. உன் மனசுதான் தப்பா யோசிக்குது'ன்னு அந்தப் பெண் மீதே பழி போடுவார்கள். ஆனால், நீதிமன்ற ஆணை தெளிவாகச் சொல்கிறது. ஆண், எப்படி வேண்டுமென்றாலும் திரிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் இதை எப்படிப் புரிந்துகொள்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே இவற்றை விசாரிக்க வேண்டும் என்கிறது.''

உ வாசுகி

``பாலியல் துன்புறுத்தல் நேர்ந்தால் பெண்கள் அதை எப்படி அணுக வேண்டுமென எண்ணுகிறீர்கள்?"

``தனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் மற்றவர்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைப்பார்களோ என்கிற எண்ணத்தைப் பெண்கள் முதலில் கைவிட வேண்டும். உடனடியாக தங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும். உரையாடலில் சொல்வதோடு நிறுத்தாமல், அதை மின்னஞ்சல் வழியாக ஆவணப்படுத்த வேண்டும். காரணம், இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள், சாட்சிகள் இல்லாத இடத்தில்தான் நடைபெறுகின்றன. ஆகவே, நாம் உடனடியாக அதைப் பதிவு செய்கிறபட்சத்தில் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.'' 

``நிர்வாகத்தின் பங்களிப்பு இதில் எந்த அளவுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்?"

``ஒரு பெண் மேலதிகாரிக்கு உடன்பட மறுத்தால், அவர் வேலை சார்ந்து அந்தப் பெண்ணை அலைக்கழிக்கத் தொடங்குவார்; பல்வேறு வகைகளிலும் துன்புறுத்துவார். நிர்வாகம் இதைக் கவனிக்க வேண்டும். தவிர, தொழிற்சங்கம் இருக்கக்கூடிய நிறுவனம் என்றால் அவர்களுக்கு இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆணும், பாதிக்கப்பட்ட பெண்ணும் தொழிற்சங்கத்தில் இருப்பார்கள் என்றால் இருவரும் நம் உறுப்பினர்கள்தானே என்றெண்ணி இதை அமைதியாகக் கடந்துவிடக்கூடாது.'' 

``ஒரு நிறுவனத்தின் நிர்வாகமே தவறு செய்கிற பட்சத்தில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?"

``இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இருக்கின்றன. அதுபோன்ற அமைப்புகளில் ஏதாவதொரு அமைப்பை நேரடியாகவோ அல்லது அலைபேசியிலோ, மின்னஞ்சல் வழியாகவோ தொடர்புகொள்ளலாம். இம்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன."


டிரெண்டிங் @ விகடன்