வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:23 (10/10/2018)

`22 நாள்களாகப் பணியில் சேராமல் தவிக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி!' - பள்ளிக்கல்வித்துறையை ஆட்டுவிக்கும் டெண்டர் கோல்மால்

பாடநூல் கழகத்திலிருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகப் பதவியேற்க வேண்டிய ஜெகந்நாதன் இன்னமும் டி.பி.ஐ வளாகத்திலேயே இருக்கிறார்.

`22 நாள்களாகப் பணியில் சேராமல் தவிக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி!' - பள்ளிக்கல்வித்துறையை ஆட்டுவிக்கும் டெண்டர் கோல்மால்

`தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ்' - செப்டம்பர் 19 அன்று அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அறிவிப்பு வெளியாகி, 22 நாள்களாகியும் புதிய நிர்வாக இயக்குநர் தன்னுடைய பணியைத் தொடங்கவில்லை. பாடநூல் கழகத்திலிருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகப் பதவியேற்க வேண்டிய ஜெகந்நாதன் இன்னமும் டி.பி.ஐ வளாகத்திலேயே இருக்கிறார். 

என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்? 

``அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணி, விலையில்லா புத்தகப் பை, பாடநூல், கிரேயான்ஸ் முதல்கொண்டு மலைவாழ் மாணவர்களுக்கு உல்லன் சுவெட்டர்கள் வரையில் வழங்குவது பாடநூல் கழகத்தின் முக்கியமான பணிகள். ஒவ்வோர் ஆண்டும் `1,500 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களை இந்தத் துறை கையாள்கிறது. ஆனால், மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய புத்தகப் பையோ, காலணியோ முறையாகச் சென்று சேருவதில்லை. இந்த ஆண்டுக்கான டெண்டர்கள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்திருக்க வேண்டியவை. இன்று வரையில் இழுபறி நீடிக்கிறது. பழைய டெண்டர்களை எல்லாம் அவசரம் அவசரமாக முடித்துக் கொடுப்பதற்காகத்தான் பழைய நிர்வாக இயக்குநரையே பதவியில் நீடிக்க வைத்திருக்கிறார்கள்" என விவரித்த பாடநூல் கழக அதிகாரி ஒருவர், 

``120 கோடி மதிப்பிலான 70 லட்சம் புத்தகப் பைகளுக்கான டெண்டர், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பைனல் ஆகியிருக்க வேண்டும். எப்போதும், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாகவே கம்பெனிகளுக்கு ஆர்டர் சென்றுவிடும். இந்த நிமிடம் இந்த டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இதில், 'கடந்தமுறை புத்தகப் பையை விநியோகித்ததில், எங்களுக்குப் பணம் வரவில்லை' என பெங்களூருவைச் சேர்ந்த கம்பெனி ஒன்று வழக்குத் தொடர்ந்திருந்தது. தற்போது அந்தக் கம்பெனி நிர்வாகிகளை சமசரம் செய்துவிட்டு, புதிதாக ஆர்டர் கொடுத்துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நாப்கின் பர்னர் (இன்சினரேட்டர்) டெண்டரில் குளறுபடிகள் நீடிக்கின்றன. இதற்கான டெண்டரில் ஐந்து கம்பெனிகள் கலந்துகொண்டன. இதிலும், லக்னோவைச் சேர்ந்த கம்பெனி ஒன்று பாடநூல் கழகத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், `நாங்கள் 15 வருட காலமாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த டெக்னிகல் டீம், எங்களை எந்த அடிப்படையில் ரிஜெக்ட் செய்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து விளக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். வழக்கமாக, தொழில்நுட்பக் கமிட்டியில் பாடநூல் கழகத்துக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு வேண்டிய கம்பெனிகளுக்கு சாதகமாக சான்றிதழ் பெற்றுக் கொள்கின்றனர்" என்றவர், 

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

`` இலவச காலணி டெண்டரிலும் இது எதிரொலிக்கிறது. இலவச காலணி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 70 லட்சம் மாணவர்கள் பலனடைகிறார்கள். இதற்காக, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு வேலைகளைப் பிரித்துக்கொள்கிறார்கள். இதில், செருப்புகளின் தரம் குறித்து CFTI (Central Footwear Training Institute) கேள்வி எழுப்பியது. இதை ரசிக்காத அதிகாரிகள், சி.எஃப்.டி.ஐ நிறுவனத்தைக் கழட்டிவிட்டுவிட்டு, சி.எல்.ஆர்.ஐ. எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தரப் பரிசோதனை நடத்தும் வேலையைக் கொடுத்தனர். 'பி.வி.சி. செருப்புகளுக்கு தோல் ஆராய்ச்சி நிறுவனம் எப்படி சோதனை நடத்தும்?' என்ற கேள்வியை அப்போது யாரும் எழுப்பவில்லை. செருப்பை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, பத்தாயிரம் ஜோடிகளுக்கு மூன்று ஜோடி செருப்புகளை சேம்பிள் எடுப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு ஜோடி செருப்புகளுக்குப் பரிசோதனை என்று எடுத்துக்கொண்டால்கூட, 70 லட்சம் செருப்புகளுக்கு அதிக நாள்கள் தேவைப்படும். ஆனால், வெறும் 18 நாள்களில் மொத்தப் பரிசோதனையையும் முடித்தனர். அந்தளவுக்கு இந்த விவகாரத்தில் ஊழல் நடந்தது. 

இதே பாணியில்தான் அண்ணா பல்கலைக்கழகத்தையும் இந்த அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு புத்தகப் பையும் நாப்கின் பர்னரும் முறையாகச் செயல்படுத்தப்படுமா எனத் தெரியவில்லை. புத்தகப் பை டெண்டரில் கையெழுத்திடவே சில கம்பெனிகள் முன்வரவில்லை. அவர்களையெல்லாம் தேடிப் பிடித்து ஆர்டரைக் கொடுத்து வருகின்றனர். அந்தக் கம்பெனிகளும், `எங்களால் வங்கி கியாரண்டியைக் கொடுக்க முடியாது' எனத் தவணை கேட்டு வருகின்றனர். இதில், அரசியல்வாதிகளின் பெயரைச்  சொல்லி கம்பெனிகளிடம் தனிப்பட்ட முறையில் சிலர் வேட்டையாடி வருகின்றனர்" என்றார் வேதனையுடன். 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் கதிர், அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு, 'அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார்' என்றதோடு முடித்துக்கொண்டார். இதையடுத்து, பாடநூல் கழகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதியிடம் பேசினோம். ``டெண்டர் காரணங்களுக்காக புதிய அதிகாரி பணியில் இணையவில்லை என்பது தவறான தகவல். பாடநூல்களை வழங்கும் பணிகளில் முதல் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. தற்போது மூன்றாவது கட்டமாக வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாகவும் சரியாகவும் நடக்க வேண்டும் என்பதற்காகப் பழைய அதிகாரி பணியில் இருக்கிறார்.

டெண்டர் காரணங்களுக்காக அவர் பணியில் இல்லை. அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடப்பதுதான். மேலும், புத்தகப் பை, நாப்கின் டெண்டர்கள் முடிந்துவிட்டன. புத்தகப் பை டெண்டருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டோம். காலணி டெண்டர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. வழக்கு இன்னும் பத்து நாளில் முடிந்துவிடும் என நினைக்கிறேன். புத்தகப் பை விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக டெக்னிகல் டீம் மீது குற்றம் சுமத்தப்படுவது குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து டீப்பாக நான் செல்லவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார் பொறுமையாக.