வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:45 (10/10/2018)

`அனைவரும் தாய் மொழியில் பேச வேண்டும்..!’ - வெங்கைய நாயுடு அட்வைஸ்

வெங்கைய்யா நாயுடு

ஒவ்வொருவரும் அவர்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்றும் தாய்மொழி கண்பார்வை போன்றது மற்ற மொழிகள் கண்ணாடி அணிவது போன்றது என்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பொள்ளாச்சியில் கூறியுள்ளார்.

கோயம்புத்தூரை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள  நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கைய நாயுடு, ஆரம்பத்தில் சில வார்த்தைகள் தமிழில் பேசி தனது உரையை ஆரம்பித்தார். ``நான் இப்போது அரசியல் சார்பற்றவன். தற்போது அரசியலில் இருந்து விலகிவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து விலகவில்லை. உணவு உற்பத்தி செய்யும்  கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். நாட்டில் உள்ள வறுமையையும் தீண்டாமைக் கொடுமையையும் ஒழிப்பதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். புறநகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்  நாம் பழைமையான சத்தான தானிய வளங்களை மறந்து வருகிறோம். நம்முடைய பாரம்பர்ய உணவு வகைகளைப் பாதுகாக்க வேண்டும். அதுவே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 

இந்தியாவில்தான் அதிகளவு இளைஞர் சக்தி இருக்கிறது. ஆனால், திறன் மேம்பாட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஜப்பானில் 80 சதவிகிதம்பேர், தென் கொரியாவில் 96 சதவிகிதம்பேர் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் வெறும்  4.69 சதவிகிதம் பேர்தான் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். எனவே, மாணவர்கள் கல்வி அறிவோடு, திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, குடும்ப அமைப்பை பாதுகாக்க வேண்டும். நம் சொந்த ஊரை மறக்கக் கூடாது. என்றவர்.

ஒவ்வொருவரும் அவர்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்றும் தாய் மொழி கண்பார்வை போன்றது மற்ற மொழிகள் கண்ணாடி அணிவது போன்றது. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற வீரர்களின் வரலாற்றை வெளிவராமல் அழுத்தியது ஆங்கில மூளை. ஆங்கில சிந்தனை ஒரு  வியாதி. அப்துல் கலாம், மோடி,  தமிழக முதல்வர், நான் உட்பட சாதாரண பள்ளியில் படித்தவர்கள்தான். கடின உழைப்பு, திறனை வளர்த்துக்கொள்ளுதல், மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி. உடல் நலத்தைக் காக்க வேண்டும். யோகா மோடிக்காக அல்ல, உங்களுக்கானது, உங்கள் உடல் மற்றும் மனநலனுக்கானது. நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்கள் மேம்பாடு முக்கியமானது. அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியமர்த்தப்படுவது அதிகரிக்க வேண்டும் என்றார்.