வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (10/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (10/10/2018)

சபரிமலை விவகாரம்..! குமரி மாவட்டத்தில் 50 இடங்களில் மறியல்; கேரளாவில் பேரணி!

பரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராகக் கேரள அரசு செயல்படுவதாக பா.ஜ.க. சார்பில் குமரி மாவட்டத்தில் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 1910 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

சபரிமலை விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துப் போராட்டம் நடத்திவருகிறது. கேரள மாநிலம் போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக கேரள அரசு மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் செயல்படுவதாகவும். சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 50 இடங்களில் நடந்த மறியலில் 1910 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் பந்தளத்திலிருந்து இன்று பேரணி தொடங்கியது. வரும் 15-ம் தேதி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு வந்தடைகிறது. இன்று தொடங்கிய பேரணியில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.