வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:45 (10/10/2018)

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச இளைஞர்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி, பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 6-ம் தேதி திருப்பூர் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் மூவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தோண்டித் துருவி விசாரித்திருக்கிறார்கள் காவலர்கள். அதில் அவர்களது பெயர் இப்ராஹிம், சுபியன், பர்காத் என்பதும், மூவருமே எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூருக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், செவந்தாம்பாளையம் என்ற பகுதியில் தங்கியிருந்த அல்அமீன், அஸ்ரபுல் இஸ்லாம், பர்காத் ஹோசன், சந்திர சோர்க்கார் மற்றும் ரோனி ஆகிய மேலும் ஐந்து வங்கதேச இளைஞர்களும் காவல்துறையிடம் சிக்கினர்.

மொத்தமாக இவர்கள் 8 பேரும் முறையான எந்தவித ஆவணங்களும் இல்லாமல் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக அவர்களை கைது செய்த காவல்துறையினர், திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.