வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:37 (10/10/2018)

'உங்க புள்ள உயிருக்கு போராடுது'- பள்ளியிலிருந்து வந்த போனால் கதறிய அம்மா

மாணவி விஜயபாரதி

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த தெத்திகிரிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தவர் மாணவி விஜயபாரதி. இவரிடம் தலைமை ஆசிரியர் ஒரு சர்க்குலரை கொடுத்து வேறு ஒரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். கொடுத்து விட்டு வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடும்போது துப்பட்டா தீப்பிடித்து எரிந்ததால் பாதி உடல் தீக்காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி விஜயபாரதியின் தாய் புனிதா, ``காலையில குளித்துவிட்டு அழகா பள்ளிக்குப் போன பிள்ளை 10:15க்கு `தீப்பிடித்து உயிருக்கு போராடிட்டுருக்கு. மேச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்' என்று சொன்னதும் என் உசுரே போயிடுச்சு'' என்று கதறி அழுதவரிடம் சற்று தேறிய பிறகு பேசினோம். ``என் கணவர் பெயர் மகாலிங்கம். எங்களுக்கு பூவரசன், விஜயபாரதின்னு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க மேச்சேரி தெத்திகிரிப்பட்டியில் குடியிருக்குறோம். எங்க வீட்டுக்காரர் நானும் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாத்துறோம்.

எங்க ஊரிலேயே உள்ள தெத்திகிரிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பாப்பா விஜயபாரதி 6-ம் வகுப்பு படிக்குது. கடந்த வெள்ளிக்கிழமை  8:30 மணிக்கு ஸ்கூலுக்குப் போச்சு. ஸ்கூல்ல தலைமை ஆசிரியை குழந்தையம்மாள் என்பவர் விஜயபாரதியையும், கீர்த்திகாவையும் கூப்பிட்டு சர்க்குலரை கொடுத்து இன்னொரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். விஜயபாரதியும், கீர்த்திகாவும் கொடுத்துவிட்டு, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர்.

சாமி கும்பிடும்போது விளக்கில் இருந்த தீ துப்பட்டாவில் பிடித்திருக்கிறது. அது தெரியாமல் ஆழ்ந்து சாமி கும்பிட்டிருக்கிறார். பிறகு கீர்த்திகா பார்த்து அலறி இருக்கிறார். அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். இதனால் அவளுக்கு ஒரு பகுதியே வெந்துவிட்டது. என் குழந்தையை தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆசிரியை பணம் கொடுப்பதாகச் சொல்லறாங்க. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். என் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தால் போதும்'' என்று தலையில் அடித்து அழுதுகொண்டே கூறினார்.