வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:18 (11/10/2018)

`எனக்கு மன்னிப்பே கிடையாது' - சக கைதிகளிடம் கதறி அழுத குன்றத்தூர் அபிராமி

குன்றத்தூர் அபிராமி

குன்றத்தூர் அபிராமி வழக்கில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட விஷம் தொடர்பான மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். `இந்த ரிப்போர்ட் வந்ததும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வோம்' என்கின்றனர் போலீஸார்.

குன்றத்தூர் அபிராமியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி விஷம் கொடுத்துக் கொலை செய்த குற்றத்துக்காக அபிராமியையும் அவரின் நண்பர் சுந்தரத்தையும் சிறையில் அடைத்து 35 நாள்களுக்கு மேலாகின்றன. புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. அதில் பெரும்பாலானவை வதந்தி என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள். சில நாள்களுக்கு முன்கூட சிறைக்குள் அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை புழல் பெண்கள் சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர், சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் குன்றத்தூர் போலீஸாரிடம் பேசினோம். ``குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ததாக அபிராமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விஷம் கொடுத்தது தொடர்பான மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் ரிப்போர்ட் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம்" என்றனர். 

சிறைத்துறை காவலர்களிடம் அபிராமி குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ``அவரைச் சந்திக்க பெற்றோர், கணவர், உறவினர் என யாரும் வரவில்லை. இதனால் கடும் மனவருத்தத்தில் இருக்கிறார். அடிக்கடி மனம் உடைந்து காணப்படுகிறார். மேலும், குழந்தைகளைக் கொன்ற தனக்கு மன்னிப்பே கிடையாது என்று சக கைதிகளிடம் கதறலுடன் அவர் சொல்லி வேதனைப்பட்டுள்ளார். தனிமையை விரும்பும் அபிராமியுடன் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், பல கைதிகள் அபிராமிக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதனால் அதிக மனஅழுத்தத்தில் அவர்  இருந்துவருகிறார். அவருக்குத் தேவையான கவுன்சலிங் சிறையில் கொடுக்கப்படுகிறது" என்றனர்.