வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:34 (10/10/2018)

"எடப்பாடி பழனிசாமி துணையோடு கரூரில் மணல்குவாரி முறைகேடு!" - மீண்டும் களத்தில் முகிலன்

சிறையிலிருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், முதல் வேலையாகக் கரூர் மாவட்டத்தில் முறைகேடாக மணல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். நேற்று (9-ம் தேதி) காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களோடு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகனைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். ``முதல்வரின் துணையோடு கரூரில் மணல்குவாரி முறைகேடு நடக்கிறது. நீதிமன்ற உத்தரவை மீறியும் இங்கே மணல் கொள்ளை நடக்கிறது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால், மீண்டும் `தலைவலி ஆரம்பம்' என்று மணல் மாஃபியாக்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம்

``தமிழகத்திலேயே அதிக அளவு மணல்கொள்ளையும்,  விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மணல்குவாரிகள் அமைத்து முறைகேடுகள் நடப்பதும் கரூரில்தான் அரங்கேறுகிறது. அதை, தடுத்து நிறுத்த வேண்டும்" என்ற கோரிக்கையோடு கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வந்தவர் முகிலன். இடையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தவிர, மேலும் சில போராட்டங்களில் அவர் பங்கெடுத்ததன் விளைவாகக் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், `புதிதாக அரசு திறக்க இருக்கும் மணல்குவாரிகளுக்கு இவரால் குடைச்சல் வரக்கூடாது என்ற பயத்தில்தான் முகிலன் கைதுசெய்யப்பட்டார்' என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் முகிலனிடம், மீண்டும் களத்தில் இறங்கியிருப்பது குறித்துப் பேசினோம்.  

``கரூர் மாவட்டத்தில் முறைகேடாக மணல்குவாரிகளும், மணல்கிடங்குகளும் செயல்பட்டு வருகின்றன. குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தற்போது அரசு மணல்கிடங்கு உள்ளது. காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுத்துக் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டி வைக்கப்படுகிறது. பிறகு, லாரிகள் மூலம் இங்கிருந்து மணல் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த ராஜேந்திரம் பகுதி மணல்கிடங்கு அமைக்க, அரசு இன்னும் பர்மிட் வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகளின் துணையோடு சட்டவிரோதமாக அரசு மணல்கிடங்கை நடத்திவருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அரசே நேரடிப் பொறுப்பேற்று மணல்குவாரிகளை நடத்தக் கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமைக்கப்பட்ட 5 மணல்குவாரிகளில் மாயனூர் மற்றும் மணத்தட்டை ஆகிய இரண்டு இடங்களுக்கு மட்டுமே மணல் அள்ளும் காலம் உள்ளது. மாயனூர் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அங்கு அவர்களால் மணல் அள்ள முடியவில்லை. 

மணல் கொள்ளைக்கு எதிராக முகிலன், காவிரி

ஆனால், மற்றொரு குவாரியான மணத்தட்டை மணல்குவாரியில் கடந்த மாதம் 3-ம் தேதி முதல் காவிரியில் மணல் அள்ளி, ராஜேந்திரம் மணல்கிடங்கில் கொட்டி வருகிறார்கள். `ஆனால் மணத்தட்டை மணல்குவாரி, இயங்குவதற்குத் தகுதியான மணல்குவாரி அல்ல' என்று ஆதாரபூர்வமான ஆய்வுக்குழுவால் சொல்லப்பட்டுள்ளது. இந்த மணத்தட்டை மணல்குவாரியிலிருந்து 430 மீட்டர் தொலைவில் மணப்பாறை கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பட்டு வருவதால், அதற்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் சம்பந்தமாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்த வழக்கறிஞர்கள் சரவணன், அழகுமணி மற்றும் பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுதான் இந்த மணத்தட்டை மணல் குவாரி பற்றி ஆய்வுசெய்து மேற்படி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சட்டத்திட்டங்களுக்கு எதிராக மணத்தட்டைப் பகுதியில் மணல்குவாரி அமைத்துள்ளார்கள். இங்கே மணல்குவாரி நடத்துவது சம்பந்தமான வரைபடத்தில் இந்த மணப்பாறை குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையம் காட்டப்படவே இல்லை. இங்கே மணல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்தவர்கள், நேரடியாக வராமலேயே கொடுத்துள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது. 

 அதேபோல், ராஜேந்திரம் அரசு மணல்கிடங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், ஆற்றிலிருந்து மணலை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து அனுமதி (டிரான்ஸ்போர்ட் லைசென்ஸ்) இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், சட்டவிரோதமாகப் போக்குவரத்து அனுமதி இல்லாமலேயே இன்றுவரை இங்கிருந்து லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. முகிலன்மணல்குவாரிகளில் அதிகபட்சம் 3 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அரசின் சட்டம் சொல்கிறது. ஆனால், ஒன்பது யூனிட் மணல் வரை இப்போது லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதை, அரசு மணல்குவாரியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்தாலும் ஊர்ஜிதமாக்கிக் கொள்ளலாம். இப்படி, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக விதிமுறைகளை மீறி மணல்குவாரிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு மாவட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுப்பணித் துறையைத் தனது கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துணையோடுதான் இவ்வாறு மணல்குவாரி முறைகேடுகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி நடைபெற்று வருகின்றன என்றும் மக்கள் சொல்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் சட்டத்தை மதித்து அதிகாரிகள் மணல்குவாரியை நடத்த வேண்டும். ஏற்கெனவே, 5 வருடங்களுக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல்குவாரிகள் நடத்தி, மணலைக் கணக்குவழக்கில்லாமல் சுரண்டி, காவிரியைப் பாலைவனமாக்கிவிட்டனர். இந்நிலையில் மணத்தட்டை, ராஜேந்திரம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவையும் மீறி மணல்குவாரி, மணல்கிடங்கு நடத்தித் தவறும் செய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை உடனே மூட வேண்டும். இதை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். இதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம்தான் நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக.

முகிலன் சிறையிலிருந்து வந்து மீண்டும் மணல் கொள்ளை பிரச்னையைக் கையில் எடுத்திருப்பது ஆளுங்கட்சி வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதனால் அவர்கள் மட்டுமன்றி, மணலைச் சட்டவிரோதமாகத் திருடும் மணல் மாஃபியாக்களும் கலங்கிப்போய் உள்ளனர். இதுபற்றி கனிமவளத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``மணத்தட்டை மணல்குவாரி, விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறது. ராஜேந்திரம் மணல்கிடங்கு இன்னும் இயக்கப்படவில்லை. முகிலன் தேவையில்லாமல் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்குகிறார்" என்றனர். 

 நெருப்பில்லாமல் புகையுமா?


டிரெண்டிங் @ விகடன்