வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (10/10/2018)

`தனிமனித விமர்சனம் எல்லைக்குள் இருக்க வேண்டும்!’ - நக்கீரன் கோபால் கைது குறித்து `கடம்பூர்’ ராஜு

`பொதுமக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனிப்பட்ட விமர்சனங்களை யார் செய்தாலும் அது குற்றம்தான். தனி மனித விமர்சனம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்” எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.   

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் வேளாண்மைத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, `தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப் பணி குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 29 இடங்களில் பக்தர்கள் புனித நீராடும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.

நக்கீரன் கோபால் கைது குறித்த கேள்விக்கு, ``பத்திரிகை சுதந்திரம் என ஒன்று உள்ளது. அதற்காகப் பொதுமக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனிப்பட்ட விமர்சனங்களை யார் செய்தாலும் அது குற்றம்தான். பத்திரிகைக்கு என ஒரு தர்மம் உள்ளது. ஜனநாயக முறைப்படி தனிமனித விமர்சனம் என்பது ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அதையே அனைவரும் பின்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. அது தவறான முன் உதாரணமாக மாறிவிடக் கூடாது. இதை மீறும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அடிப்படையில்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதற்காகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குறித்த தேதிக்குள் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரிலேயே அவர் கைது செய்யப்படவில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க