வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (10/10/2018)

கடைசி தொடர்பு:20:17 (10/10/2018)

`வாசிப்புதான் அறிவைப் பெருக்கும்!’ - நூலகத்துக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்த 76 வயது மூதாட்டி நெகிழ்ச்சி

தஞ்சாவூர் அருகே வாடகைக் கட்டடத்தில் இயக்கி வந்த அரசுப் பொது நூலகத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் மதிப்புகொண்ட 4,303 சதுர அடி நிலத்தை மூதாட்டி ஒருவர் தானமாகக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நூலகத்துக்கு தானம்

தஞ்சாவூர் அருகே உள்ள மெலட்டூர் கிராமத்தில் மாவட்ட மைய நூலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதுவரை இரண்டு இடங்களுக்கு இடமாற்றமும் செயப்பட்டது. 30,000 புத்தகங்களுக்கு மேல் உள்ள இந்த நூலகத்தில் தினமும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 100 பேர் வந்து புத்தகங்களைப் படித்துச் செல்கிறார்கள். அப்பகுதி மக்கள் இந்த நூலகத்தை மிகப்பெரிய சொத்தாகவும் கருதுவதோடு அதைத் தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் நூலகத்துக்குச் சொந்தமாக இடம் வேண்டும், அதில் கட்டடம் கட்டி நூலகத்தைச் செயல்படுத்த வேண்டும் எனப் பலருக்கு ஆசை. இதில் நூலகராகப் பணிபுரியும் பழனிவேல் என்பவரும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரும் இதற்குப் பெரும் முயற்சி எடுத்தார்கள். இதையடுத்து மாயா என்பவர் தனக்குச் சொந்தமான 4,303 சதுர அடி நிலத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதிவாசிகளிடம் பேசினோம். ``மெலட்டூரைப் பூர்வீமாகக் கொண்டவர் மாயா. அவருக்கு 76 வயது ஆகிறது. திருமணமே செய்துகொள்ளாத இவர் சிறுவயதிலேயே பெற்றோருடன் மும்பைக்குச் சென்றுவிட்டார். மேலும், தற்போது வரை மாயா அங்கேயே வசித்து வருகிறார். துறைமுகத்தில் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் ஆப்ரேட்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவருக்கு மெலட்டூரில் சொந்தமாக இடங்கள் உள்ளன.

மாயாவிடம் மெலட்டூர் பகுதி மக்கள், `நம்ம ஊருக்கு சிறப்பே நம்ம நூலகம்தான். ஆனால், போதிய இடவசதி இல்லாததால் வாசகர்கள் உள்ளிட்ட அனைவரும் பல சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது’ எனக் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்ட மாயா நூலகத்துக்கு தனது இடத்தைத் தானமாகத் தர முன்வந்தார். மேலும், மெலட்டூரில் உள்ள தன் உறவினர் நரசிம்மனிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னார். இவை அனைத்தும் தயாரான பிறகு, தன் வயதையும் பொருட்படுத்தாமல் மும்பையிலிருந்து நேராக, கடந்த 4-ம் தேதி பாபநாசம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த மாயா தனக்க்ச் சொந்தமான 4,303 சதுர அடி நிலத்தைத் தமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறைக்கு தான சாசன பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்தார். அரசின் மதிப்புபடி அந்த இடத்தின் விலை ரூ.6 லட்சம் வரை  இருக்கும். அப்படிப்பட்ட இடத்தைத் தானமாக வழங்கிய மாயாவை அனைவரும் நெகிழ்ச்சியோடு பாராட்டியதோடு அவருக்கு கைகூப்பி நன்றி கூறியிருக்கின்றனர்.

அதற்கு மாயா, `எனக்கு நன்றி சொல்லாதீங்க. நான் பிறந்த ஊருக்கு நல்லது செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். வாசிப்புதான் மக்களின் அறிவை வளர்க்கும் என்பதை உணர்ந்ததால் நூலகத்துக்கு இடம் கொடுத்ததைப் பெருமையாகவும் நினைக்கிறேன். சீக்கிரமே இந்த இடத்தில் அரசிடம் கேட்டு நூலகத்துக்காகப் புதிய கட்டடத்தைக் கட்டி அதில் நூலகத்தை இதைவிட சிறப்பாகச் செயல்படுத்துங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க