வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/10/2018)

`நெல்லு விவசாயம் கைகொடுக்கலை... வெள்ளரி எங்களைக் கரைசேர்த்துட்டு!’ - ஸ்கூட்டியில் வெள்ளரி விற்கும் சாந்தி

`எங்களை நெல் விவசாயம் கைகொடுக்காம கைவிரிச்சுச்சு. ஆனா, வெள்ளரி போட்டேன். எங்கள் குடும்பத்தை அது காப்பாத்துது!" என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் சாந்தி.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் ஒடுவந்தூரைச் சேர்ந்தவர் சாந்தி. பெண் விவசாயியான இவர், தனது அரை ஏக்கர் நிலத்தில் வெள்ளரி பயிரிட்டுள்ளார். அதைப் பறித்து ஸ்கூட்டியில் வைத்துக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரூரில் வந்து விற்பனை செய்கிறார். மழை சீஸன் தொடங்கிவிட்டதால் வெள்ளரி விளைச்சல் குறைந்தாலும், விடாமல் வியாபாரம் பார்க்கிறார். கரூரில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அவரிடம் பேசினோம்.

``எங்க பகுதியே வண்டல் மண் நிறைந்த பகுதி. 5 வருஷத்துக்கு முன்னாடி வரை அப்படி ஒரு விளைச்சல் விளையும். நெல் விவசாயம் பார்ப்போம். நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், சாயப்பட்டறை கழிவுநீர், காகிதபுரத்தில் உள்ள அரசு பேப்பர் ஆலை கழிவுநீர் கலந்து எங்க பகுதி மண், விவசாயம் பார்க்க லாயக்கில்லாத மண்ணா மாறிட்டு. நெல், கரும்பு, வாழை, வெற்றிலைன்னு விளைந்த மண்ணில் இப்போது விவசாயிகள் கோரைப்புல் போடும் கொடுமையான நிலைமை.

எங்க நிலமும் அப்படித்தான் மாறிட்டு. கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரை லாபம் அதிகம் வரலைன்னாலும், தத்திமுத்தி நெல் விவசாயம் பார்த்தோம். ஆனால், அதுவும் சரியா விளையலை. அப்பதான் கடந்த ஒரு வருஷமா வெள்ளரி போட்டு, அதை விற்பனை பண்ணிட்டு இருக்கேன். சாணி உரம் போட்டு வளர்த்ததால் ஓரளவு கைகொடுத்துச்சு. ஒரு வருஷமா இப்படி ஸ்கூட்டியில் வந்து வெள்ளரி வியாபாரம்தான் பார்க்கிறேன். களை பறிக்கிறது, மருந்து தெளிக்கிறது, தண்ணீர் பாய்ச்சுறதுன்னு எல்லா வேலையையும் நானே பார்த்துடுவேன். ஒரு பையன், ஒரு பெண். அவங்க படிக்கிறாங்க. கணவர் கூலி வேலைக்குப் போவார். தினமும் கரூருக்கு வியாபாரத்துக்காக வந்துபோக ஒன்றரை லிட்டர் வரை வண்டிக்கு பெட்ரோல் போடணும். எல்லா செலவும் போக தினமும் 400 ரூபாய் வரை கையில் நிக்கும். மழை தொடங்கிட்டதால் உற்பத்தியும் வியாபாரமும் பாதிச்சுருக்கு. இருந்தாலும் விடாம வியாபாரம் பார்க்கிறேன். நெல் விவசாயம் கைவிரிச்சாலும், இந்த வெள்ளரி எங்களை கரைசேர்த்திருக்கு!" என்றார்.