வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:20 (10/10/2018)

``இது வணிக வளாகமா, கோவை மாநகராட்சி அலுவலகமா?" - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், வாகன விற்பனை மேளா நடத்தப்பட்டதற்குச் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வாகன மேளா

ஸ்மார்ட் சிட்டிப் பணிகள், தண்ணீருக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்று கோவை மாநகராட்சி படு பிஸியாக இருக்கிறது. என்னதான் ஸ்மார்ட் சிட்டியாக இருந்தாலும், டவுன்ஹால் பகுதியில் இயங்கி வரும் பிரதான மாநகராட்சி அலுவலகத்தில் வாகனம் நிறுத்துவதற்கே திண்டாட்டம் நிலவி வருகிறது.

மாநகராட்சி ஊழியர்கள், மனு அளிக்க வரும் மக்களுக்கு என்று வாகனம் நிறுத்துமிடம் இருந்தாலும், போதுமான இடவசதி இல்லை. இதனால், மாநகராட்சிக்கு வரும் வாகனங்களை வளாகத்துக்கு வெளியில் நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ள டவுன்ஹால் பகுதியில் மிகவும் கஷ்டப்பட்டு வாகனத்தை நிறுத்தித்தான், மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், தனியார் வங்கி சார்பில் வாகன விற்பனை மேளா நடத்தப்பட்டுள்ளது. மனு கொடுக்க வருபவர்களுக்கே வாகனத்தை நிறுத்த இடமில்லாத சூழ்நிலையில், வாகன விற்பனை மேளாவுக்காக, கார்களும் பைக்குகளும் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் கொதித்துப் போயுள்ளனர். “நம்ம ஊர்ல, எத்தனையோ வணிக வளாகங்கள் இருக்கு. அங்க வெச்சு நடத்தியிருக்கலாம். மாநகராட்சி அலுவலகத்தில் செய்ய வேண்டிய பணிகள் கிடப்பில் கிடக்க, சம்பந்தமே இல்லாத நடவடிக்கைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதனிடையே, “வாகனங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள மாநகராட்சிப் பணியாளர்களுக்காக, இந்த வாகன விற்பனை மேளா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.