வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (10/10/2018)

`தாமிரபரணி ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ - நீதிமன்றம் கேள்வி

தாமிரபரணி ஆற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

தாமிரபரணி உத்தரவு - நீதிமன்றம்

தாமிரபரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத ஹிந்து பக்த சபை மாநில இளைஞரணித் தலைவர் எஸ்.கணேசன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை நம்பி 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. இது தவிர குடிநீருக்காக பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படுகிறது. 

ஆனால், இந்த ஆறு சரிவர பராமரிக்கப்படவில்லை. அதனால் தாமிரபரணி ஆற்றுப்படுகைகள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், உடனடியாக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், மதுரை மாவட்ட ஆட்சியர் சாந்திப் நந்தூரி ஆகியோர் மீது கணேசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

அதில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் அல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ``தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரம் விழா நடைபெறவுள்ளது. ஆனாலும்கூட இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை’’ என வாதிட்டனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.