வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:00:30 (11/10/2018)

ஒகி புயல் நிவாரணம் கேட்டுப் போராடிய 103 மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி!

ஒகி புயல் நிவாரணம் கேட்டுப் போராடிய 103 பேர் மீது போடப்பட்ட வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.

ஓகி புயல்

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புனித ஹெலன்ஸ் ஆலய பங்குத்தந்தை அன்பரசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒகி புயலால் பெரும் பதிப்பு ஏற்பட்டது. பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் நிவாரணம் கோரியும் மீட்புப் பணிகளை விரைவாகச் செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, கடந்த 8.12.2017-ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடியதாக வி.ஏ.ஓ புகார் அளித்தார். புதுக்கடை காவல் நிலையத்தில் 103 பேர் மீது வழக்கு பதிவு செய்து, குழித்துறை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை, ஒகி புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டுத்தான் போராடினோம். எனவே 103 பேர் மீது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கும் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது. இதில் 103 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.