வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:55 (10/10/2018)

`சர்ச்சையில் சிக்கிய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்’ - தமிழக அரசு நடவடிக்கை

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கவிதா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால் ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் சிலை செய்வதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக இவ்விவகாரத்தில் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். 

சிலை செய்வதற்கு 5,00,000 ரூபாய் பணம் கவிதாவிடம் கொடுத்திருப்பதாகக் கோயில் அர்ச்சகர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதா கைது செய்யப்பட்டார். அதேநேரம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அறநிலையத்துறை பணிகளில் கவிதா மறைமுகமாகத் தலையிடுகிறார் என யானை ராஜேந்திரன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அறநிலையத்துறை நாளை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31-ம் தேதி அதாவது கைதான அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க