வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/10/2018)

கடைசி தொடர்பு:23:30 (10/10/2018)

`ஆக்கிரமிப்பை அகற்றுவதாச் சொல்லி மரத்தை வெட்டி ஆற்றுக்குள் போடுறாங்க!’ - மதுரை களேபரம்

வைகை

 

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி சாலையில் உள்ள  மரங்களை வெட்டி வைகை ஆற்றில் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

மதுரையில் வைகை ஆற்றையும் இரு புறங்களில் உள்ள கரைகளிலும் குப்பை கொட்டுவது, கோழிக் கழிவுகளைப் போடுவது, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவது என்று மதுரை வாசிகள் தங்களால் முடிந்தவரை அசுத்தம் செய்கின்றனர். சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளும் சுத்தம் செய்து விழிப்பு உணர்வுகளைச் செய்தாலும் தனிமத ஒழுக்கம் இல்லாமல் வைகை தொடர்ந்து சீர்கெட்டு ஆக்கிரமிப்பு சூழ்ந்துகிடக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்வதாகக் கூறி, வைகைக் கரையில் உள்ள மரங்களை வெட்டி ஆற்றுக்குள் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரை ச.ம.க-வைச் சேர்ந்த அசோக் நம்மிடம் கூறுகையில், "மதுரை குருவிக்காரன் சாலை (அன்ன பூரணி உணவகம் ) பாலம்  ஆற்றங்கரை ஓரம் முதல் தியாகராஜர் கல்லூரி பின்புறம் பி.டி.ஆர் பாலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் சுத்தம் செய்தனர். பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால், 5ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்கள், சிறுவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரது முயற்சியில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த மரங்களை வேரோடு இன்று ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அகற்றியது மதுரை மாநகராட்சி. அகற்றிய மரங்களை வைகை ஆற்றின் உள்ளேயே குப்பைகளைப்போல் தள்ளிவிட்டுச்சென்றது. இந்தக் காட்சிகள் எங்களை மிகவும் வேதனை அடக்ச் செய்தது. கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்டி ஆற்றுக்குள் போட்டு வைகையைச் சீர்கேடு செய்கிறது'' என்று புகார் தெரிவித்தார்.