வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:08:23 (11/10/2018)

மாணவர்களுக்கு ஐஏஎஸ் பட்டம் - புதுவித முயற்சியில் கலக்கும் அரசுப் பள்ளி!

கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில், ஒவ்வோர் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் மலர்கள், கனிகள், காய்கறிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டும் விழா நடைபெற்றது. அதேபோல, ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு வைத்து, ஒரு ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

 அரசு பள்ளி


 கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய வியப்பூட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த தொட்டியப்பட்டியில் உள்ள  பள்ளி மாணவர்கள், நல்ல அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும் என்ற உந்துதலில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்பான்ஸர்கள் மூலம் பள்ளிக்குத் தேவையான கட்டடங்கள், கணினிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார். அதோடு, பாடங்களை கணினி மற்றும் இணையம் வாயிலாகக் காட்சிகள் மூலம் நடத்தி, மாணவர்களிடம் கல்வி குறித்த புரிதலை ஏற்படுத்திவருகிறார். அந்த வகையில்தான், வட்டார கல்வி அலுவலரை அழைத்துவந்து, இப்படி மாணவர்களுக்கு பெயர்சூட்டும் விழாவை விமரிசையாக நடத்தியுள்ளார். அதோடு,15,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற சீருடைகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.


 பள்ளி

பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம். "இது, மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள ஊர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டில் இருந்தது. நான் இங்கு பணிக்கு வந்ததும், பல்வேறு முயற்சிகள், வளர்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். மாணவர்கள் மத்தியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலை பற்றிய விழிப்பு உணர்வை சிறு வயதிலேயே ஏற்படுத்த தான் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வருட ஆரம்பத்திலேயே பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை உள்ளடக்கிய தேர்வை வைக்கிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்கள் வரும் மாணவர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ்களாக்கி அவர்களுக்கு அப்படி அடையாள அட்டை தருவோம்.

தினமும் அந்த அடையாள அட்டைகளைத்தான் அந்த மாணவர்கள் அணிந்து வர வேண்டும். கிளாஸை ஒழுங்குபடுத்துவதில் இருந்து பள்ளி வளர்ச்சி விஷயத்தில் உரையாடுவது வரை அந்த மாணவர்கள் பங்கெடுப்பார்கள். அதேபோல, மாணவர்களுக்கு மரம், கனி, மலர்களின் பெயர்கள் நினைவில் நிற்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். அப்பதான் மாணவர்களின் பெயர்களுக்கு முன்னால் அந்த பெயர்களைச் சேர்க்கலாம் என்று முடிவு பண்ணி இந்த விழாவை நடத்தினோம். முதலாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், மலர்களின் பெயர்களைச் சூட்டினோம்.

இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், கனிகளின் பெயர்களையும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், காய்கறிகளின் பெயர்களையும் சேர்த்து சூட்டினோம். அதேபோல நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன், மரங்களின் பெயர்களையும் அறிவியல் அறிஞர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தோம். இந்த முயற்சிகளைப் பார்த்த கல்வித் துறை அதிகாரிகள், 'நல்ல முயற்சி; புதுமையான முயற்சியும்கூட. இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்' என்று வாழ்த்தினார்கள். அதோடு, இந்தக் கல்வியாண்டில் இதுவரை விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த இரண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினோம். எல்லா ஆசிரியர்களும் சேர்ந்துதான் இந்த முயற்சியை எடுக்கிறோம்" என்றார்.