வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:08:24 (11/10/2018)

ஆவணங்களை எப்படிப் பாதுகாக்குறீங்க? - பதிவுத் துறையை கேள்விகளால் துளைத்த உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆவணங்களைப் பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள்குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக பதிவுத் துறை ஐ.ஜி நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி  உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட பத்திரத்தை வழங்கக் கோரி, பூபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின்போது, சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகள் உதவியுடன், அரசு நிலங்களும் தனியார் நிலங்களும் பதிவுசெய்யப்படுவதாகவும், பழைய ஆவணங்களுக்குப் பதில் புதிய ஆவணங்கள் பதிவுசெய்து வைக்கப்படுவதாகவும், பழைய ஆவணங்கள் சேதமடைந்துவிட்டதாகப் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சைதாப்பேட்டை சார் பதிவாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று மீண்டும் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது.  சார் பதிவாளர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, ஆவணங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சார் பதிவாளர், `பெரிய கவர் ஒன்றில் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதாகத்` தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி கிருபாகரன், ``நிலங்கள் தொடர்பான 200 ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.   கவனக் குறைவாகவும் மெத்தனமாகவும் ஆவணங்கள் வைக்கப்பட்டு, சேதமடைந்துள்ளது. ஆவணங்கள் சேதமடைவதால்,  சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் கேள்விக்குள்ளாக்கப்படும்.  ஆவணங்கள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், சொத்துகளுக்கும் பாதுகாப்பு இல்லை. அதற்கு அதிகாரிகள் தம் கடமையைச் செய்யத் தவறுவதே காரணம்'' என கண்டனம் தெரிவித்தார்.  

ஆவணங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இது சம்பந்தமாக நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பதிவுத் துறை ஐ.ஜி-க்கு உத்தரவிட்டார். இதேபோல, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, பத்திரப் பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தித் தாக்கல்செய்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல்செய்துள்ள விவரங்களைப் பார்க்கும் போது, சோதனை, விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது எனவும், பதிவுத் துறையில் ஊழல் படிந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.  பதிவுத் துறை அதிகாரிகள், வெளிநாட்டு சொகுசு கார் என சுகபோக வாழ்க்கை வாழ்வதாகக் குற்றம் சாட்டிய நீதிபதி, 2016 முதல் 2018-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.