வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (11/10/2018)

கடைசி தொடர்பு:11:04 (11/10/2018)

``நல்லதோ, கெட்டதோ... போன்ல வேணாம்... நேர்ல பேசுங்கம்பார்!'' - `20 ரூபாய்’ டாக்டர் பற்றி மகள்

லேசான காய்ச்சல் தலைவலினு மருத்துவமனைக்குப் போனாலே மருந்து, மாத்திரை, ஸ்கேன், கன்சல்டன் பீஸ் எனத் தாளித்துவிடுவது இன்று சகஜமாகிவிட்டது. ஆனால், 20 ரூபாய்க்கு மேலே ஒரு பைசா வாங்காமல் மருத்துவத்தைச் சேவையாகச் செய்தவர், டாக்டர் ஜெகன் மோகன். யாரும் எதிர்பாராத நேரத்தில், தன் சேவையை முடித்து உலகைவிட்டுச் சென்றுவிட்டார். இதை அறிந்ததும் அவர் வீட்டையும் மருத்துவமனையும் நேரில்சென்று பார்த்தேன்.

20 ரூபாய் டாக்டர்

அந்தத் தெருவே அவருக்காகத் துக்கம் அனுசரிப்பது போன்று அமைதியில் இருந்தது. எப்போதும் நோயாளிகளுக்காகத் திறந்திருக்கும் அவருடைய அறையின் கதவுகள் மூடியிருந்தன. மேல் மாடியிலிருந்து இறங்கிவந்த ஒரு பெண்மணி, விசாரித்துவிட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டார். எந்த அலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருந்த அந்த க்ளினிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். க்ளினிக்கிற்குத் தன் மனைவி பெயரை வைத்திருந்தார். அந்தச் சமயம் திரும்பிவந்த பெண்மணி, ``அய்யாவும் அம்மாவும் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களை மேலே வரச்சொன்னாங்க'' என்றார்.

20 ரூபாய் டாக்டர்

மருத்துவரை இழந்த அவர்களது குடும்பம் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தது. ஆறுதல் வார்த்தைகள் சொல்லமுடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தோம். டாக்டரின் மருமகன் மௌனத்தை உடைத்து, ``தூங்கி மூணு நாள் ஆச்சுங்க. மாமாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததிலிருந்தே தூக்கம் போச்சு. அவர் எப்படியும் திரும்ப எங்கக்கிட்ட வந்துருவார்னு நினைச்சோம். ஆனால், எல்லாமே மாறிப்போச்சு'' என்றார்.

 

``அப்பாவைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. எல்லா விஷயத்திலும் பெர்பெக்ட்டா இருப்பார். யாரையும் தொந்தரவு பண்ணக் கூடாதுனு நினைக்கிறவர். ஒருநாளும் தேவையில்லாம லீவு போடமாட்டார்.  ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ண நாளிலும் காலையில் க்ளினிக் போய்ட்டுத்தான் வந்தார்” எனச் சொல்லும் மகள் ஷோபாவின் கண்கள் கலங்குகிறது.

 

``காலையில் அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிடலுக்குப் போனப்போ ரொம்ப இயல்பாப் பேசினார். `எல்லாம் சரியாகிடும். நான் நல்லா இருக்கேன். நீங்க கவலைப்படாம இருங்க'னு சொன்னார். பசிக்குது ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்டதுக்குக் கஞ்சி கொடுத்தோம். அவர் சாப்பிடறதைப் பார்த்ததும் இனி எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கையா இருந்துச்சு. ஆனால், அன்னிக்குக் காலையில் 10 மணிக்கே அப்பா எங்களைவிட்டுப் பிரிஞ்சுட்டார். யாருமே இதை எதிர்பாக்கலை. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாமல் என் மகனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன். அவன் தாத்தாவைக் கடைசியாப் பார்த்துப் பேசமுடியலையே; என்னால அவரை இந்த நிலைமையில் பார்க்க முடியாதுன்னு கீழே வராமல் மாடியிலேயே இருந்துட்டான்'' என்கிறார் ஷோபா.

20 ரூபாய் டாக்டர்

``அவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாது. ரொம்ப எளிமையான மனிதர். எப்படி 20 ரூபாயை வாங்கிட்டு இவரால் குடும்ப நடத்தமுடிஞ்சது என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. அவர் வரவுக்கு மீறி செலவு பண்ணவே மாட்டார். அத்தையும் மாமாவும் மார்கெட்டுக்குப் போனால், வீட்டுக்குத் தேவையானது என்னவோ அதை மட்டுமே வாங்குவாங்க. பணத்தை வீணா செலவு பண்ணமாட்டாங்க. அவர் அணியும் உடைகளைப் பார்த்தீங்கன்னா, எங்கயாச்சும் கிழிஞ்சிருக்கும். ஆனால், அவர் மனைவிக்கோ, மகளுக்கோ அப்படி நடக்க விடமாட்டார். தன்னைவிட மத்தவங்க மேலே அதிகம் அக்கறைப்படும் மனுசன்” என மாமனார் பற்றி நெகிழ்கிறார் மருமகன் கமலக்கண்ணன்.

 

மருமகன் சொல்வதை ஆமோதித்த டாக்டரின் மனைவி சந்திரா, ``இவ்ளோ வருசத்துல அவர் கோபப்பட்டுப் பார்த்ததில்லை. ரொம்ப அன்பானவர். தினமும் க்ளினிக்ல நடந்த எல்லாத்தையும் சொல்வார்'' என்றவரால், அதற்கு மேல் பேசமுடியவில்லை. மகள் ஷோபா தொடர்கிறார். ``அப்பாவைப் பற்றிச் சொல்லிட்டே இருக்கலாம். அப்பாவும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்ச அருமையான தம்பதிகள். வீட்டுல தினமும் எல்லாரும் இரவு ஒண்ணா உக்காந்து பேசிக்குவோம். எங்களோட முகத்தைப் பார்த்தே என்ன மனநிலையில் இருக்கோம்னு கண்டுபிடிச்சுடுவார். பிறகு, நம்மக்கிட்ட பேச்சுக்கொடுத்தே அதை மறக்கவெச்சுடுவார். 

 

ஆரம்பத்திலிருந்தே அப்பாவுக்கு செல்போன் பயன்படுத்துறது பிடிக்காது. அப்படிப் பேசுறது சரியா வராதுனு சொல்வார். `ஒருவேளை நாம பேசும் தொனி, அந்தப் பக்கத்தில் கேட்கிறவங்களுக்குத் தப்பா கன்வே ஆகிடலாம். நேர்ல பேசறதுதான் பண்பான விசயம். நல்லதோ, கெட்டதோ நேர்லதான் பேசிக்கணும் அதுதான் மரியாதை'னு சொல்வார். இவ்வளவு நாள்களில் அப்பா தனக்குனு ஒரு செல்போன் வைச்சுக்கலை. அதை யூஸ் பண்றது எப்படின்னும் கத்துக்கலை. என்னிகாவது நாங்களே போன் பண்ணிக்கொடுத்தால் பேசுவார். இல்லைன்னா, க்ளினிக்ல இருக்கும் டெலிபோனில்தான் பேசுவார். அதுகூட ரொம்ப ரொம்ப அவசியப்பட்டாதான். இனி அப்பா இல்லாத நாள்களை கற்பனை பண்ணவே கஷ்டமா இருக்கு'' என மனமுடைந்து மௌனமானார் ஷோபா.

 

மாமாவின் ஸ்பெஷாலிட்டியே இந்த மாதிரி பார்த்துப் பார்த்து எல்லாமே செய்யறதுதான். அவர் யாருக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்ததில்லை. வீட்ல யாருக்காவது ஏதாவது வேணும்ன்னா, கடைக்குக் கூட்டிட்டுப் போய், என்ன வேணுமோ வாங்கிக்கன்னு சொல்வார். தேவையறிந்து செய்யும் குணம் அவர்கிட்ட அதிகம். முக்கியமாக புகைப்படங்கள் எடுக்குறத கூட ரொம்பவே தவிர்ப்பார்.'' என நினைவுகளைப் புரட்டிப்பார்க்கிறார், கமலக்கண்ணன்


டிரெண்டிங் @ விகடன்