வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (11/10/2018)

கடைசி தொடர்பு:11:50 (11/10/2018)

எம்.ஜி .ஆருக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் கோரும் ஆறுமுகசாமி ஆணையம்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அளித்த சிகிச்சை ஆவணங்களை வழங்க, அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதன் பேரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார். ஜெயலலிதா மரணம் குறித்து இந்த ஆணையம் தற்போது விசாரணை நடத்திவருகிறது. 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ மருத்துவர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்திவருகிறார்.

இந்த விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் சிலர் ஆஜராகாமல் தவிர்த்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஆறுமுகசாமி ஆணையம், கடந்த மாதம் தனது கண்டனத்தைக் கடிதம்மூலம் அப்போலோ நிர்வாகத்துக்குத் தெரிவித்திருந்தது. அதில், ஆணையத்தின் முன் மருத்துவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அளித்த சிகிச்சைகுறித்த ஆவணங்களை வழங்க, அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச்செல்ல எடுக்கப்பட்ட வழிமுறைகள் என்ன? என்பது குறித்தும் கேட்டுள்ளது. வரும் 23-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல்செய்ய அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு,  எம்.ஜி,ஆர் குறித்த ஆவணங்களைத் தற்போது விசாரணை ஆணையம் கோரியுள்ளது.