வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (11/10/2018)

கடைசி தொடர்பு:12:05 (11/10/2018)

‘கொலையா... தற்கொலையா? - வருமான வரித்துறை பெண் ஊழியர் சாவில் நீடிக்கும் மர்மம்!

வருமான வரித்துறை பெண் ஊழியர் சுலோச்சனா

வருமான வரித்துறை ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு நொச்சிக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர்கள், மலையாண்டி - சுலோச்சனா தம்பதியர். சுலோச்சனா, கடந்த நவம்பர் மாதம்தான் கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜூனியர் டைப்பிஸ்ட் ஆக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். சுலோச்சனாவும் அதே பகுதியில் வசிக்கும் பெண்மணிகள் மூன்று பேரும் சேர்ந்து ஸ்வீட் பாக்ஸ் மற்றும் துணிகளுக்கு அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றனர். நான்கு பார்ட்னர்களில் ஒருவரான மல்லிகா என்பவரின் செயல்பாடுகள் பிடிக்காமல், மற்ற பார்ட்னர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

அப்போதே பங்குகள் பிரிக்கப்பட்டு, கம்பெனியை இழுத்து மூடியிருக்கிறார்கள். ஆனாலும், சுலோச்சனாவுக்கும் மல்லிகாவுக்கும் இருந்த நட்பின் அடிப்படையில், இருவரும் சேர்ந்து அரிசிக்கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்தில், வியாபாரம் இல்லாததால் அரிசிக் கடையையும் மூடியிருக்கிறார்கள். வியாபாரம் நஷ்டமானதால், 'தன்னுடைய பங்கைப் பிரித்துக்கொடுங்க' என சுலோச்சனா கேட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில், மல்லிகாவின் மகனான சேகர், ‘என்னுடைய திருமணம் முடிந்ததும் உங்களுடைய பணத்தை செட்டில் செய்துவிடுகிறேன்’ என நம்பிக்கை அளித்திருக்கிறார். இப்படிப் பணம் கேட்கும்போதெல்லாம் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி இழுத்தடித்துவந்திருக்கின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில், ஈரோடு பெருந்துறையில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் வைத்து, சுலோச்சனாவுக்கும் சேகருக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பணம் கேட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்ற சுலோச்சனா, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட வக்கீல் மற்றும் சேகர் ஆகியோர் சுலோச்சனாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த குடும்பத்தாரிடம், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறி சுலோச்சனாவின் சடலத்தை ஒப்படைத்திருக்கின்றனர். உடனே உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள், ‘சுலோச்சனா சாவில் மர்மம் இருக்கிறது, சம்பந்தப்பட்ட வக்கீல் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, குடும்பத்தாரிடம் அனுமதி பெறாமலேயே, போலீஸார் போஸ்ட் மார்டம் செய்து உடலை எடுத்துச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் கண்டு கொதித்துப்போன உறவினர்கள், ‘உண்மை தெரியும் வரை, நாங்கள் உடலை வாங்க மாட்டோம்’ என மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்

பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது, உண்மையிலேயே சுலோச்சனா தற்கொலை செய்துகொண்டாரா,  பணப் பிரச்னையைத் தவிர வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். விசாரணையின் முடிவில் தான் முழு உண்மையும் தெரியவரும்.