வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (11/10/2018)

கடைசி தொடர்பு:12:21 (11/10/2018)

குழந்தைகளை கொலை செய்த பிறகு அபிராமி என்ன செய்தார்? - எஃப்.ஐ.ஆரில் தகவல் 

அபிராமி

குழந்தைகளை கொலை செய்தபிறகு அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் போலீஸிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 சென்னைக் குன்றத்தூரில் பெற்ற இரண்டு குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியும் அவரின் நண்பர் சுந்தரத்தையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அபிராமியின் கணவர் விஜய் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். அதில் அபிராமி, சுந்தரம் ஆகியோர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விஜய் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் உள்ள தகவல்கள். 

 ``நான் (விஜய்) மூன்றாம் கட்டளை அக்னீஸ்வரன் கோயில் தெருவில் மாதம் 3,500 ரூபாய் வாடகையில் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். எனது சொந்த ஊர் கடலூர் குறிஞ்சிபாடி தாலுகா ஆடூர் அகரமாகும். நான் கடந்த 4 ஆண்டுகளாக தி.நகரில் லோன் வாங்கிக் கொடுக்கும் அலுவலகத்தில் மீடியேட்டராக வேலை செய்துவருகிறேன். எனக்கு மாத கமிஷனாக 15,000 ரூபாய் கிடைக்கும். கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி எனக்கும் குன்றத்தூர் அருகே உள்ள கோவூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜனின் மகள் அபிராமிக்கும் குடும்பத்தார் பேசி திருமணம் செய்து வைத்தார்கள். எங்களுக்கு 6 வயதில் அஜய் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். எனது மகன் அஜய் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். மகள் வீட்டில் இருந்தார். நான் வேலைக்குச் சென்ற பின் மனைவி அபிராமி வீட்டில் இருப்பார்.

நான் தினமும் காலை 11 மணிக்கு வேலைக்குச் செல்வேன். அதுபோல 31.8.2018-ல் மதியம் ஒரு மணிக்கு நான் வேலைக்குப் போகும்போது மனைவி சமைக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு மகள் எழுந்தவுடன் அம்மா வீட்டுக்குச் சென்று சாப்பிடுகிறேன் என்று சொன்னார். நான் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குச் போய்விட்டேன். எனக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் எனது மாமியார், வேலை முடித்துவிட்டு என்னை அவர்களது வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தார். 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் எனது மனைவி அபிராமிக்கு போன் செய்தேன். அபிராமிக்கு போன் போகவில்லை.

அபிராமி மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்

உடனே மாமனார் வீட்டுக்குப் போனேன். அங்கு எனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாததால் சந்தேகமடைந்தேன். ஏற்கெனவே ஒரு முறை எனது மனைவி கோபித்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சுந்தரம் என்பவர் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியிருந்தார். அவரை நாங்கள் சுந்தரம் வீட்டிலிருந்து அழைத்தபோது வீட்டுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். நானும் எனது மச்சான் பிரசன்ன மணிகண்டன், மாமா சௌந்தர்ராஜன், உறவினர்களும் சமாதானம் பேசி அழைத்து வந்தோம். எனவே அங்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்து எனது மச்சான் பிரசன்ன மணிகண்டனுடன் சுந்தரம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுந்தரமும் இல்லை. எனது மனைவியும் இல்லை.

உடனே நானும் பிரசன்ன மணிகண்டனும் திரும்பி எனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நான் கதவைத் திறந்து பார்த்தபோது எனது மகளும் மகனும் வாயில் நுரைதள்ளி மூச்சி பேச்சி இல்லாமல் இறந்துகிடந்தார்கள். அப்போது எனது மனைவி வீட்டில் இல்லை. எனது மனைவி அபிராமி சுந்தரம் என்பவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவனுடன் சேர்ந்து வாழ என் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திட்டம் போட்டு எனது மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு சுந்தரத்துடன் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது. எனவே, எனது பிள்ளைகளை கொலை செய்த எனது மனைவி மற்றும் சுந்தரம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று எஃப்.ஐ.ஆரில் தகவல்கள் உள்ளன. 

குழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்த மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். அந்த ரிப்போர்ட் வந்ததும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். பெண்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி மனஅழுத்தத்தில் இருப்பதால் அவர் தவறான முடிவு எதுவும் எடுத்துவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீஸார் கண்காணித்துவருகின்றனர்.