வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (11/10/2018)

கடைசி தொடர்பு:14:59 (12/10/2018)

மாணவர்கள் போகவிடாமல் தடுத்த ஆசிரியர் பகவான் இப்போது எப்படியிருக்கிறார்?

ஆசிரியர் பகவான்

'சாட்டை' திரைப்படத்தில் கற்பனையில் உருவான முன்மாதிரி ஆசிரியரை நம் கண்முன் கொண்டுவந்தவர், பகவான். இவர் பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளியகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலானார். அப்போது, மாணவர்கள் கண்ணீரோடு தடுத்த காட்சியைக் கண்டவர்கள் சிலிர்த்துப்போயினர். ஆசிரியர் பகவானுக்கு, அந்தப் பள்ளி மாணவர்களை விட்டுப் பிரிவதற்கு மனமே இல்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், இந்தித் திரைநட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பகவானின் அன்புமிகுந்த ஆசிரியர் பணியைப் பாராட்டினர். சமூக ஊடகங்களில், அன்றைய டிரெண்டாகவும் அது மாறியது. இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு, அரசு மீண்டும் அவரை அந்தப் பள்ளியில் பணியாற்ற அனுமதித்துள்ளது. தற்போது, அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், ஆசிரியர் பகவானிடம் பேசினோம்.

"ம.தி.மு.க தலைவர் வைகோ, நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் பேசியது உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அது, அவரின் பொறுப்பை அதிகரிக்கச்செய்திருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், மாணவர்களின் தேர்ச்சியிலும் அக்கறையிலும் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பயத்தைக்கொடுத்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிறையக் கடிதங்கள், மெயில்கள் வந்துகொண்டே இருக்கின்றன. என்னை ரொம்பவே நெகிழவைத்தது. பாளையங்கோட்டை சிறையிலிருந்து  ஐந்து பேர் சேர்ந்து எழுதியிருந்த கடிதம். மாணவர்கள், அழுதுகொண்டே என்னைச் சுற்றி நிற்கும் படத்தையும், அந்தச் செய்தியையும் செய்தித்தாளிலிருந்து அழகாகக் கத்தரித்து எடுத்து இணைத்து, இதுபோன்ற ஆசிரியர்கள்தான் இந்தச் சமூகத்துக்குத் தேவை என்று விரிவான கடிதம் எழுதியிருந்தனர். அதைப் படித்ததும், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அளவுக்கு என்மீது அன்பு காட்டும் மாணவர்களுக்குத்தான் அந்தப் பெருமை சேர வேண்டும். அந்தக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதி அனுப்பினேன். என் மாணவர்களுக்கு நான் இப்போது டெப்டேஷனில் பணிபுரிகிறேன் என்பது தெரியாது. இந்தக் கல்வி ஆண்டு முடிந்ததும் மீண்டும் பணிமாறுதல் செய்யப்படலாம். ஆனால், இப்போது என் கவனம் முழுவதும், படிப்பில் முழு ஈடுபாடில்லாத மாணவர்களையும் தேர்வுக்குள் முழுமையாகத் தயார்செய்வதில் இருக்கிறது" என்கிறார் ஆசிரியர் பகவான்.